அம்பத்தூர் தாங்கல் ஏரி பூங்காவில் பொழுதுபோக்கு தலமாக திகழும் படகு குழாம்: மாநகராட்சி தகவல்

சென்னை: அம்பத்தூர் தாங்கல் ஏரி பூங்காவில் அமைக்கப்பட்ட படகு குழாம் பொதுமக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு தலமாக மாறியுள்ளது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், 83வது வார்டு, மதனங்குப்பம் பிரதான சாலை, கள்ளிக்குப்பம் தாங்கல் ஏரி பூங்காவில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்த தாங்கல் ஏரி 64,749 சதுர மீட்டர் பரப்பளவிலான இடத்தில் 47,434 சதுர மீட்டர் பரப்பளவில் 15 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 21,68,68,248 லிட்டர் நீர் சேமிப்பு கொள்ளளவு கொண்டது. இதில் 1168 மீட்டர் நீளத்தில் சுற்றுச்சுவர், 3582 சதுர மீட்டர் நடைபாதை, 8853 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை பகுதி, 4376 சதுர அடி பரப்பளவில் திறந்தவெளி மற்றும் விளையாட்டு பகுதி, 490 சதுர மீட்டர் பரப்பளவில் பெண்கள் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதற்கான பகுதி, வாசிப்பு பகுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஏரியில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமில் 2 படகு துறைகள், 4 மிதிவண்டி படகுகள், 2 மீட்பு படகுகள், 40 உயிர் காப்பு சட்டைகள், 28 பூங்கா மேசைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 10 கழிப்பறைகள், 7 எண்ணிக்கையில் தண்ணீர் உள்ளேறும் குழாய், 2 எண்ணிக்கையில் தண்ணீர் வெளியேறும் குழாய், 12 மீட்டர் உயரம் கொண்ட ஒரு உயர்கோபுர மின்விளக்கு, 16 மீட்டர் உயரம் கொண்ட ஒரு உயர்கோபுர மின்விளக்கு, 37 எண்ணிக்கையில் தெருமின் விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாம் பொதுமக்களுக்கு மிகச்சிறந்த பொழுதுப்போக்கு தலமாக அமைந்துள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: