மாதவரம்: சென்னையின் வளர்ந்து வரும் பகுதியான மாதவரத்தில் ஹைடெக் சிட்டி அமைவதற்கு துறை ரீதியான ஆவண நகர்வுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாதவரம் பால் பண்ணை பகுதியில் ஆவின் நிறுவனம் மற்றும் கால்நடை துறைக்கு சொந்தமான சுமார் 400 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தின் ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
எஞ்சியுள்ள பகுதிகளில் ஏராளமான காலி நிலங்கள் இருப்பதால் இங்கு ஹைடெக் சிட்டி உருவாக்க வேண்டும் என்று மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாதவரம் பால் பண்ணை பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ஹைடெக் சிட்டி அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் லிமிடெட் மூலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) முதற்கட்ட ஆய்வு நடத்தியது.
மாதவரத்தில் அமைய உள்ள ஹைடெக் சிட்டிக்கு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடி செலவு செய்யவும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கவும் மாஸ்டர் பிளான் திட்டத்தை தமிழக அரசு தயார் செய்து வருகிறது. மேலும், ஹைடெக் சிட்டி செயல்பாட்டுக்கு வரும்போது ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் வருவதோடு, ஆண்டுக்கு பல லட்சம் கோடிகளுக்காண வியாபார பரிமாற்றமும் நடக்கும்.
ஐதராபாத்தில் தற்போது உள்ள ஹைடெக் சிட்டியை விட பன்மடங்கு தொழில்நுட்பம் சார்ந்த வசதிகள் உருவாக்கப்படுவதோடு, ஆசியாவிலேயே முதன்மை பெற்ற ஹைடெக் சிட்டியாக தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மாதவரம் பகுதியில் அமைய இருப்பதோடு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் இந்த ஹைடெக் சிட்டி ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
இதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டதன் அடிப்படையில் ஆவின் நிறுவனம் மற்றும் கால்நடை துறை ஆகியவற்றில் இருந்து ஹைடெக் சிட்டி அமைப்பதற்கு தேவையான இடங்கள் அளவீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நிலத்தை ஒதுக்கீடு பெறுவதற்கு துறை ரீதியான ஆவண நகர்வுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக தொழில் துறைக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டு ஹைடெக் சிட்டி அமைப்பதற்கான திட்ட வரைவுகளுடன் ஒப்பந்தமும் கோரப்பட உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மாதவரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மெட்ரோ ரயில், புதிய பேருந்து நிலையம், நூற்றுக்கணக்கான புதிய பள்ளி கட்டிடங்கள், மழைநீர் சேமிப்பு குளங்கள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், என பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் ஏராளமான திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும், சென்னையிலேயே மிக பிரமாண்டமான சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்ட படகு குழாம் மாதவரத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு வளர்ச்சிகள் கண்ட மாதவரம் தொகுதியில் ஹைடெக் சிட்டி வருவது வரவேற்கத்தக்கது.
மாதவரம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் வாகன போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் இருப்பதால் இந்த ஹைடெக் சிட்டி மிகவும் அவசியமான ஒன்று. இதன் மூலம் வடசென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த பட்டப்ப்படிப்பு படித்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், இந்த நகரம் உருவாகி, பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், அது வட சென்னை மீதான பிம்பத்தையே மாற்றி, சென்னையின் இன்னொரு ஹைடெக் சிட்டியாக மாறிவிடும்,’ என்றனர்.
* ஒரு லட்சம் பேருக்கு வேலை
மாதவரத்தில் அமைய உள்ள ஹைடெக் சிட்டியில், தகவல் தொழில் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் தொழில் தொடங்கும் வகையில் தொழில்நுட்ப பூங்கா, உலகளாவிய திறன் மற்றும் மேம்பாட்டு மைய ஆய்வகம், தங்கும் விடுதி, வணிக வளாகம், குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சுற்றுச்சூழல் பூங்காக்கள், விளையாட்டு வளாகம், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை அமையும்.
மேலும், ஒருங்கிணைந்த சாலை மற்றும் மெட்ரோ போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம், தண்ணீர், குழாய் மூலம் சமையல் எரிவாயு சப்ளை உள்ளிட்ட வசதிகள் அமைந்திருக்கும். இதுதவிர, ஷாப்பிங் மால்கள், சில்லறை விற்பனை கடைகள், ஓட்டல்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடன் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு, சுற்றுவட்டாரத்தில் வியாபாரம் மற்றும் பிற தொழில் வளமும் பெருகும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* தொழில் நிறுவனங்கள் ஆர்வம்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரசின் திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கு பார்வையுடன் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால் தற்போது மாதவரத்தில் அமையவுள்ள ஹைடெக் சிட்டியில் அலுவலகம் மற்றும் தொழில் சார்ந்த மையங்களை அமைக்க உலகின் பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஆரக்கிள், இன்போசிஸ் டெக்னாலஜிஸ், ஐபிஎம், ஆக்சென்ச்சர், காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஜென்பேக்ட், சைலோடெக் நோவார்டிஸ்,
ஹூண்டாய் மொபிஸ், ஒரக்கிள் போன்ற பல்வேறு பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு, மற்றும் பிபிஓ சேவை மையங்களை அமைக்கவும், முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதுமட்டுமின்றி மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ஹோண்டா,
ஸ்கோடா, டொயோட்டா, நிசான், கியா, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார் நிறுவனங்கள், என்பீல்ட், டிவிஎஸ், யமஹா, போன்ற பல்வேறு பிரபலமான மோட்டார் பைக் நிறுவனங்கள், எலக்ட்ரானிக், டெக்ஸ்டைல்ஸ், பர்னிச்சர், பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தரப்பட்ட பிரபலமான நிறுவனங்கள் தங்களுடைய விற்பனை மற்றும் கிளைகளை அமைக்க தயார் நிலையில் உள்ளன.
* எதிர்பார்ப்பு
மாதவரம் பால் பண்ணையில் ஹைடெக் சிட்டி உருவாக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உயர்தரமாக ஹைடெக் சிட்டி அமைவதால் சுற்று வட்டாரத்தில் உள்ள வீட்டுமனை, நிலத்தின் மதிப்பு சதுர அடிக்கு ரூ.20 ஆயிரம் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இங்குள்ள நில உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை விற்காமல் ஹைடெக் சிட்டி துவக்கப்படும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
