சென்னை: மும்பையில் ஓமியோபதி முடித்துவிட்டு சென்னையில் அலோபதி மருத்துவம் பார்த்த போலி டாக்டரை மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்திய தோல் மருத்துவர்கள், வெனரியாலஜிஸ்டுகள் மற்றும் தொழுநோய் நிபுணர்கள் சங்க தலைவர் கவியரசன், கடந்த வாரம் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பூனம் லலித் சர்மா (52) என்பவர், மும்பையில் உள்ள நரிமன் பாயின்ட் என்ற இடத்தில் ஓமியோபதி கிளினிக் நடத்தி வருகிறார். ஓமியோபதி டாக்டரான இவர், தமிழ்நாட்டில் முறையாக அனுமதி பெறாமல், போதிய மருத்துவ கல்வி தகுதியின்றி, அலோபதி (ஆங்கிலம் மருத்துவம்) மருத்துவர்கள் பயன்படுத்தும் அறுவை சிகிச்சை உபகரணங்களை பயன்படுத்தி, பொதுமக்களுக்கு காதின் ஓட்டைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.
எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் அளித்தார். அதன்பேரில், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரி தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம் ெநடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஓமியோபதி முடித்துவிட்டு பூனம் லலித் சர்மா என்பவர், சட்டவிரோதமாக அலோபதி மருத்துவம் மூலம் பொதுமக்களுக்கு ஓட்டல் அறையிலேயே அறுவை சிகிச்சை செய்து வந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து பூனம் லலித் சர்மா மற்றும் அவரது பெண் தோழியான யானைகவுனி பகுதியை சேர்ந்த வரவேற்பாளர் ஷில்பா (44) ஆகியோரை பிடித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், சட்டவிரோதமாக அலோபதி மருத்துவம் செய்த போலி டாக்டரான பூனம் சர்மா மற்றும் அவரது தோழி ஷில்பா ஆகியோர் மீது மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரி அளித்த புகாரின்படி தேனாம்பேட்டை போலீசார், போலி டாக்டர் மற்றும் அவரது தோழி மீது 125, 272, 318(4), rw15(3) மற்றும் மருத்துவ கவுன்சில் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு ெசய்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
