சுவாமிநாதன் மீது தாக்குதல் பாமக சொந்தங்களை என்னிடமிருந்து பிரிக்க முடியாது: ராமதாஸ் ஆவேசம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மாநிலங்களவை தேர்தலில் எனது நேர்முக உதவியாளரும் தனிச் செயலாளருமான பி.சுவாமிநாதன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அன்புமணி ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ள நிலையில், எனது உத்தரவின் பேரில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்வதாக சுவாமிநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை முடிந்து தலைமை செயலகத்தில் இருந்து வெளியே வந்த சுவாமிநாதனை மர்மநபர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து வழிமறித்து தாக்கியதில் அவரின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.

சுவாமிநாதனை தாக்கியவர்கள் மீது காவல்துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இத்தகைய செயலுக்கு பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமக சொந்தங்களை என்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது என்பதை வீணர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: