கூட்டுறவு துறை உதவியாளர்கள் பணிகளுக்கான நேர்முக தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈரோடை சேர்ந்த ஒய்.தருண்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், கூட்டுறவு வங்கிகளின் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை அதில் தேர்வானவர்களின் பட்டியலை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிடவில்லை. உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி தாமதிப்பதாக கூறியுள்ளார்.

செயலாளர் மற்றும் உதவி செயலாளர் பணிகளுக்கான தேர்வு குறித்த அந்த வழக்கு என்பது உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான தேர்வுகளுக்கு தொடர்பில்லாதது. எனவே, நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான முடிவுகளை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.பிரகாசம், செயலாளர் மற்றும் உதவி செயலாளர் பணிகளுக்கான தேர்வில் பொதுப்பிரிவு நியமனங்களை எதிர்த்த வழக்கில் முடிவுகளை வெளியிடலாம். ஆனால் நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு மட்டுமே தலைமை நீதிபதி அமர்வு தடைவிதித்துள்ளது என்று வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி.ஆஷா, கூட்டுறவு துறை உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டுமென்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories: