சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக வேலூரில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. 4 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. வறண்ட வானிலை காரணமாக வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக வேலூரில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி 100 டிகிரி, தர்மபுரி, சென்னை, சேலம், திருப்பத்தூர், திருத்தணியில் 99 டிகிரி வெயில் நிலவியது.
இந்நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 8ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 9ம் தேதி டெல்டாவில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
