தமிழகத்தில் காலியான 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு திமுக, அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு: 10 எம்எல்ஏக்கள் முன்மொழியாததால் சுயேச்சைகள் மனு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழியாததால் அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தமிழகத்தில் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு மற்றும் தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா) ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்பிக்களையும், அதிமுக 2 எம்பிக்களையும் தேர்வு செய்ய முடியும். இந்த தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் (5ம் தேதி) கடைசி நாள் என்பதால் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட ஒரு இடத்தில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக சார்பில் மு.தம்பிதுரை, அதிமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் பாமக (அ) சார்பில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்துள்ளனர். சுயேச்சை வேட்பாளர்களாக மேட்டூரை சேர்ந்த பத்மராஜன், திருச்சியை சேர்ந்த கே.பி.எம்.ராஜா, அம்பத்தூரை சேர்ந்த டி.கே.மேஷாக் கிருபாகரன், அக்னீஸ்வரன், கந்தசாமி, பாமக நிறுவனர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன், இசக்கி முத்து ஆகிய 7 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை நடந்தது. அப்போது திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், தேமுதிக, பாமக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த 6 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர்களுக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழியாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இன்று (சனி), நாளை (ஞாயிறு) விடுமுறையாகும். 9ம் தேதி (திங்கள்) மாலை 3 மணிக்குள் வேட்புமனு மக்கள் வாபஸ் வாங்கலாம். அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் வாபஸ் வாங்காத பட்சத்தில், 9ம் தேதி மாலை 3 மணிக்கு 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக தமிழக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான சான்றிதழையும் அளிப்பார்.

* அன்புமணிக்கு திடீர் எதிர்ப்பு
மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக ஆதரவுடன் அன்புமணி பாமக(அ) சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அதேநேரம் சுயேச்சை வேட்பாளராக பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோளை ஏற்று, அவரது உதவியாளர் சுவாமிநாதன் மனு தாக்கல் செய்து இருந்தார். நேற்று வேட்புமனு பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளர் சுவாமிநாதனுக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழியாததால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதேநேரம், ‘பாமக(அ) சார்பில் மனு தாக்கல் செய்திருந்த அன்புமணியின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும், நான் தான் பாமகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்’ என்று சுவாமிநாதன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வாதிட்டார். ஆனால், அன்புமணிக்கு பாமக மற்றும் அதிமுகவை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து இருந்ததால், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

Related Stories: