சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 6ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சரணடைய நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன் உள்பட 12 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் அதற்கு வழக்கறிஞரை நியமித்து அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கு அவகாசம் வழங்கும் வகையில் சரணடைவதற்கு நான்கு வாரகால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், அஸ்வத்தாமன் உள்பட 12 பேரும் சரணடைவதற்கான கால அவகாசத்தை மார்ச் 13ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மார்ச் 13ம் தேதி வரை தினமும் காலையில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
