காரை வழிமறித்து ராமதாஸ் உதவியாளர் மீது கொலை வெறி தாக்குதல்: அன்புமணி, சவுமியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சார்பில் மாநிலங்களவை தேர்தலில் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் மனுதாக்கல் செய்தார். பொதுவாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். ஆனால் ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதனுக்கு ஜி.கே.மணி, சேலம் அருண் மட்டுமே முன்மொழிந்தனர். அதேநேரம் பாமக (அன்புமணி) தரப்பில் கட்சியின் தலைவர் அன்புமணி அதிமுக ஆதரவுடன் மாநிலங்களவை வேட்பாளராக மனுதாக்கல் செய்தார்.

இதனால் அன்புமணிக்கும் அவரது தந்தைக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அதேநேரம் அன்புமணி வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. ராமதாஸ் தரப்பு வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் ராமதாஸ் வேட்பாளர் அன்புமணி வேட்புமனுவை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக தேர்தல் ஆணையரிடம் தனது ஆட்சேபனையை புகாராக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்துவிட்டு சுவாமிநாதன் காரில் புறப்பட்டு சென்றார்.

அண்ணா சாலையில் செல்லும் போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் காரை வழிமறித்து நிறுத்தி சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் சுவாமிநாதனுக்கு முகம் மற்றும் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், பாமக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தேன். வேட்பு மனு சரிபார்ப்புக்கான பணி நடந்தது.

அப்போது எனக்கு எதிராக பல பிரச்னைகள் நடந்தது. தமிழக தேர்தல் அதிகாரி சாந்தி ஒருதலைபட்சமாக செயல்பட்டு அன்புமணி வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் அளிதோம். அவர் நாங்கள் கொடுத்த வேட்புமனு மற்றும் புகார்களை ஏற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, அவர்கள் அளிக்கும் உத்தரவுப்படி உங்கள் மனு மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

இதை தொடர்ந்து வீட்டிற்கு காரில் சென்றோம். கார் அண்ணா சாலை டிவிஎஸ் அருகே வந்த போது, பைக்கில் வந்த 2 பேர் வழிமறித்து முதலில் எனது மகனை தாக்க முயன்றனர். உடனே நான் என்ன என்று கேட்டபோது என்னை முகத்தில் தாக்கி காயப்படுத்தினர். அவர்கள் ‘உனக்கு முன்பே நாங்கள் எச்சரித்து சொன்னோம். நீ கேட்கவில்லை. அன்புமணி மற்றும் சவுமியா அன்புமணி விஷயத்தில் தலையிடாதே என்று சொன்னோம். நீ கேட்கவில்லை. 15.8.2025ல் அன்புமணி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தாய். நாங்கள் அப்பவே விட்டுவிட்டுடோம்.

இப்ப வந்து நாங்கள் உன்னை விடமாட்டோம் என்று கூறி முகத்தில் கடுமையாக தாக்கினர். எனவே எனது உயிருக்கு எந்தவித பிரச்னை என்றாலும், அன்புமணி அவரது மனைவி சவுமியா அன்புமணி, வழக்கறிஞர் பாலு, சொல்லின் செல்வம், சசிகுமார், வினோபா பூபதி ஆகியோர் தான் காரணம். தேர்தல் அலுவலகத்தில் வழக்கறிஞர் பாலு மிரட்டிய வீடியோ ஆதாரங்களும் உள்ளது.

எனவே என்னை தாக்கிய நபர்கள் மீதும், தாக்குதல் நடத்த தூண்டிய அன்புமணி, சவுமியா அன்புமணி ஆகியோர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனதெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணா சாலை போலீசார் சுவாமிநாதன் மீது தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: