பார்வை இழப்பு தடுப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.7.39 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு இரண்டு பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவை தொடங்கி வைத்து, 108 அவசரகால ஊர்தி சேவையை மேம்படுத்த வாட்ஸ்அப் செயலியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதை தொடர்ந்து கடலூரை சேர்ந்த 14 வயது மருத்துவ பயனாளிக்கு ரூ.20 லட்சம் செலவாகக்கூடிய அரியவகை சிகிச்சை கட்டணமில்லாமல் தக்க நேரத்தில் சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. நலமுடன் உள்ள அந்த சிறுமியை நேரில் சந்தித்து, மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: பார்வை இழப்பு தடுப்பு திட்டம் செயல்படுத்துவதில் தேசிய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 5 ஆண்டுகளில் 13 மாவட்டங்களில் பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 97 அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு கண் சிகிச்சை மையத்தில் 4,15,301 கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவப்பிரிவு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 4,502 முகாம்கள் நடத்தப்பட்டு, இந்த வாகனங்கள் வாயிலாகவே 3,19,847 பயனாளிகளை பரிசோதனை செய்யப்பட்டு, 56,992 பயனாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: