கூட்டணியை முடிவு செய்யாமல் ராமதாஸ் தாமதம் செய்வது ஏன்?: பரபரப்பு தகவல்கள்

திண்டிவனம்: கூட்டணியை முடிவு செய்யாமல் ராமதாஸ் தாமதம் செய்வது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சட்டசபை பொதுத்தேர்தலுக்கான கூட்டணியை ஓரளவு முடித்துவிட்டு தொகுதி எண்ணிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. பாமகவில் தனி அணியாக செயல்படும் அன்புமணி, தேஜ கூட்டணியில் இணைந்த நிலையில், அவருக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ், தனது அணியின் கூட்டணி நிலைப்பாட்டினை தை மாதமே அறிவிப்பதாக கூறியிருந்தார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறிவந்த ராமதாஸ், கடந்த ஒரு வாரமாக, தனது கட்சியின் தலைமை நிர்வாக குழு, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், 2ம் மட்ட மற்றும் பல்வறு அணிகளின் பொறுப்பாளர்களை அழைத்து கூட்டணி தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார். இருப்பினும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிக்காத ராமதாஸ், இன்னும் 3 நாட்களாகும் என நேற்றைய பேட்டியின்போது தெரிவித்தார். வாகனங்களில் மாற்றம் வருவது இயற்கை, ஆனால் முடிவெடுத்துவிட்டால் அதில் உறுதியாக இருப்போம், அடுத்த 3 நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்பு இருக்கும் என்றார்.

முதிர்ந்த அரசியல்வாதியாக பார்க்கப்படும் ராமதாசை, கடந்த காலங்களில் கூட்டணி தொடர்பாக முக்கிய கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் தைலாபுரம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவர். அதன் பிறகே தலைமைகள் சந்திப்பு நடைபெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது வரையிலும் தைலாபுரத்துக்கு தமிழகத்தின் பிரதான மாநில மற்றும் தேசிய கட்சிகள் வராத நிலையில் ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். கூட்டணியை உடனே இறுதி செய்ய நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பாமக இரண்டாக பிளவுபட்டு கிடக்கும் சூழலிலும் கட்சியில் புதுமுகமான தனது மகளும், செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி அல்லது பேரன் முகுந்தனுக்கு ராமதாஸ் ராஜ்யசபா சீட் கேட்பதாலே கூட்டணியை இறுதிசெய்ய தாமதம் ஆகிறதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ராஜ்ய சபா வேட்பாளருக்கான மனுதாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அதன்பிறகாவது கூட்டணியை ராமதாஸ் முடிவெடுத்து அறிவிப்பாரா? என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: