அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் உதவியாளர் தங்கும் அறை தயார்

திருப்பூர், பிப்.10:திருப்பூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் உதவியாளர்கள் தங்கும் அறை கட்டுமானப் பணி நிறைவடைந்து துவங்கப்படும் நிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தினமும் சுமார் 3 ஆயிரம் புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். உள் நோயாளிகளாக, 600 பேர் தங்கியுள்ளனர்.உள் நோயாளிகளாக உள்ளோரை கவனிக்க, உறவினர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்போருக்கு தங்குவதற்கான வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

தங்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி,  தீனதயாள் அந்நோத்யா யோஜனா (என்யுஎல்எம்) திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்  தலைமை மருத்துவமனைக்கு வளாகத்தில், சிகிச்சை பெற வருவோரின் உதவியாளர்களின் தங்கும் அறை ரூ. 96.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட திட்டமிடப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணி 2018ம் ஆண்டு துவங்கியது. தற்போது வேலை பணிகள் அனைத்து நிறைவடைந்து திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து திருப்பூர், மாவட்ட அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை தலைவர் நிர்மலா கூறியதாவது: இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் பெண்களுக்கும், மேல் தளத்தில் ஆண்களுக்கும் என மொத்தம் 50 பேர் தங்கலாம். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குளிக்கும் அறை, கழிப்பறை, மின்சாரம், குடிநீர், தரை விரிப்பான் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து நோயாளிகளை பார்க்க செல்வோர், இரவில் தங்க சிரமப்பட தேவையில்லை. ஆனால், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவகல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் துவங்கப்பட்டும் நடைபெற்று வருகிறது. மேலும், மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கட்டிடம் இதுவரை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. ஆகையால், விரைவில் துவங்கப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து, நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில்,நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் கட்டிடம் திறக்கப்படாததால் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்களின் உதவியாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே மரத்தடியிலும், வெயிலிலும் காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. எனவே, அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: