சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே 3 கட்டமாக 525 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஐந்தாவது கட்டமாக ரூ.33.82 கோடியில், மேம்படுத்தப்பட்ட தண்டையார்பேட்டை-1 மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்து, ரூ.170 கோடி மதிப்பீட்டிலான 25 மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் உள்பட 100 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், இரண்டாம் கட்டமாக ரூ.1337.50 கோடியில் மொத்தம் 750 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்காக இரண்டு நிறுவனங்களுடன் மொத்த விலை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.
இந்த 750 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் கலைஞர் கருணாநிதி நகர், பெரம்பூர், மத்திய பணிமனை-மிமி, ஆலந்தூர், ஆவடி, ஐயப்பன்தாங்கல், பாடியநல்லூர் ஆகிய பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து தற்சமயம் இயக்கப்பட்டு வரும் டீசல் பேருந்துகளை தொடர்ந்து இயக்குவதற்காக தையூர், தரமணி, வரதராஜபுரம், ஆட்டந்தாங்கல், திருவள்ளூர், மாமண்டூர் ஆகிய 6 இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானம் செய்வதற்காகவும், 7 மின்சாரப் பேருந்து பணிமனைகளை மின்னேற்ற வசதிகள் செய்து மின்சார பணிமனைகளாக மேம்படுத்துவதற்காகவும் ரூ.289 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
