புதுடெல்லி: ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில நிர்வாகங்களுக்கு ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஈரான் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தின. இந்த சர்வதேச விவகாரத்தின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதால், ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில நிர்வாகங்களுக்கும் எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த கடிதத்தில், வெளிநாட்டில் நடக்கும் இத்தகைய மோதல்கள் காரணமாக இந்தியாவில் மத ரீதியான வன்முறைகள் உருவாகாமல் தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மத வழிபாட்டுத் தலங்களில் ஆக்ரோஷமான பேச்சுகள் மூலம் வன்முறையைத் தூண்டும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆத்திரமூட்டும் வகையில் உரையாற்றும் பேச்சாளர்களைக் கண்காணித்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள ஒன்றிய அரசு, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளியெறிய உத்தரவிட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சர்வதேச நிகழ்வுகளால் ஏற்படும் உணர்ச்சிகரமான சூழலைத் தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளாமல் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை;
நகர், அனந்த்நாக், புல்வாமா மற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று நகரின் லால் சவுக் மற்றும் கடிகார கோபுரம் அமைந்துள்ள பகுதிகள் தகர சீட்டுகள் மற்றும் தடுப்புகள் கொண்டு முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கு முழுவதும் வதந்திகள் பரவுவதை தடுக்க செல்போன் இணைய சேவை 2ஜி என்ற குறைந்த வேகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சிஆர்பிஎப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சூழலில், முதல்வர் உமர் அப்துல்லா ‘பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
