×

ஆந்திராவில் பயங்கரம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

திருமலை: ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், சமர்லகோட்டா மண்டலத்தில் உள்ள வெட்லபாலெமில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று காலை வழக்கம்போல், 50 தொழிலாளர்கள் பட்டாசு தொழிற்சாலையில் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசில் தீப்பற்றி வெடித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர் தீயை அணைப்பதற்குள் தீ மள மளவென வேகமாக பரவி பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களில் பரவி வெடிக்க ஆரம்பித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். ஆனால், அவர்கள் ஓடுவதற்குள் தீ வேகமாக பரவி வெடித்தது. இதில் தொழிற்சாலை முழுவதும் புகை மூட்டமானது. 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உடலில் தீ பற்றியது.

அதில் அவர்கள் அலறியபடி அங்கும் இங்குமாக ஓடினர். மேலும், சில தொழிலாளர்கள் தீயின் தாக்கத்தால் அங்கேயே சுருண்டு விழுந்து துடித்தனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், தொழிற்சாலையின் உள்ளே சென்று பார்த்தனர். அதில் 20 தொழிலாளர்கள் உடல்கள் சிதறி இறந்து கிடந்தனர். மேலும், உடல் முழுவதும் தீயில் கருகி துடித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வெட்லபாலெம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Vetlapalem ,Samarlakota ,Kakinada district, Andhra Pradesh ,
× RELATED மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும்...