×

தவறான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயணம் மோடி இஸ்ரேல் சென்று வந்தது வெட்கக்கேடானது: காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி: காங்கிரஸ் வெளிவிவகாரத் துறை தலைவரும் முன்னாள் அமைச்சருமான சல்மான் குர்ஷித் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி கடந்த 25 மற்றும் 26 தேதிகளில் இஸ்ரேல் சென்றார். மேற்கு ஆசியாவில் பதற்றங்கள் அதிகரித்து பெரிய மோதல்களுக்கான அபாயம் ஆகியவற்றின் போது பிரதமரின் பயணத்தால் காங்கிரஸ் ஆழ்ந்த கவலை அடைந்தது. மோடியின் இஸ்ரேல் பயணம் தவறான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகும். இந்த நேரத்தில் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றது ராணுவ தாக்குதலை தீவிரப்படுத்துதலுக்கான அரசியல் ஒப்புதல் என்ற கருத்தை உருவாக்குகிறது. இது சர்வதேச ஒழுங்கு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கான இந்தியாவின் வரலாற்று உறுதிப்பாட்டிற்கு முரணானது.

இந்தியா இஸ்ரேலுடன் மட்டுமல்லாமல், ஈரான், பாலஸ்தீனம் மற்றும் பிற நாடுகளுடனும் நாகரிகம், பொருளாதாரம், எரிசக்தி, புவிசார் அரசியல் உறவுகளைக் கொண்டுள்ளது என்பதை பாஜ அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் வெட்கக்கேடானது. இஸ்ரேலுக்கு சென்று விட்டு வந்த 2 நாட்கள் கழித்து, இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கூட்டாக தாக்குதலை நடத்தியுள்ளன. பிரதமரின் இரண்டு நல்ல நண்பர்கள் தொடங்கிய போரின் வெளிச்சத்தில் இது இன்னும் அதிகமாகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

* பதற்றங்களின் போது பயணம்
ஐதராபாத் எம்பி, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி நிருபர்களிடம் கூறுகையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் பற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னிடம் கூறினாரா என்பதை மோடி விளக்க வேண்டும். அவ்வாறு நெதன்யாகு கூறியிருந்தால் பயணத்தை உடனே ரத்து செய்து விட்டு அவர் நாடு திரும்பியிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் அது இந்திய மக்களுக்கு விளைவித்த துரோகத்துக்கு சமமாகும். வளைகுடா நாடுகளில் 1 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். மோடியின் வருகைக்குப் பிறகு இஸ்ரேல் ஈரானைத் தாக்கியது என்ற எண்ணத்தை அந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தக்கூடும் என்றார்.

Tags : Modi ,Israel ,Congress ,New Delhi ,External Affairs Minister ,former Minister ,Salman Khurshid ,West Asia ,
× RELATED மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும்...