திருவனந்தபுரம்: காமாக்யா நாராயன் சிங் என்பவர் இயக்கிய கேரளா ஸ்டோரி 2 படத்தில் கேரள மாநிலத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன், கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு 15 நாட்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன் இரவோடு இரவாக விசாரித்த டிவிஷன் பெஞ்ச், கேரளா ஸ்டோரி 2 படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவே இந்தப் படம் வெளியானது. ஆனால் கேரளாவில் எங்கும் இந்தப் படத்தை பார்ப்பதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம், கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கேரளா ஸ்டோரி 2 படம் வெளியானது. ஆனால் படத்தைப் பார்ப்பதற்கு 10 பேருக்கும் குறைவாகவே ரசிகர்கள் இருந்ததால் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கேரளா ஸ்டோரி 2 படத்தைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
