மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு சித்தரின் 86வது பிறந்தநாள் விழா மார்ச் 3ம் தேதி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா, நாளை காலை 3 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்குகிறது. இதையடுத்து கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு சித்தரின் உருவ சிலைக்கும் ஆன்மிக இயக்க துணை தலைவர் அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் அபிஷேக, ஆராதனை செய்கின்றனர்.
காலை 9.30 மணி அளவில் ஆன்மிக குரு பங்காரு சித்தரின் உருவ சிலை வைக்கப்பட்ட வெள்ளி ரத தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. 9.45 மணியளவில் சித்தர் பீடம் வருகை தரும் ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க நிர்வாகிகளும், பக்தர்களும் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். காலை 10.30 மணிக்கு ஆன்மிக குரு பங்காரு சித்தர் திருப்பாதுகைகள், சிலைக்கு பாத பூஜை நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து மாலை 3.45 மணிக்கு கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு கொண்டு வரப்படும் ஆன்மிக ஜோதிகளுக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் வரவேற்பு அளிக்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஆன்மிக இயக்க துணை தலைவர் தேவி பங்காரு கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைக்கிறார்.
2ம் தேதி காலை 9.15 மணிக்கு பங்காரு சித்தரின் உருவம் தாங்கிய தங்க ரத தேர் திருவிழா நடைபெறுகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். 10 மணிக்கு குரு பீடத்தில் உள்ள பங்காரு சித்தர் திருப்பாதுகைகள், சிலைக்கு பக்தர்கள் பாத பூஜை செய்கின்றனர். அன்னதானத்தை ஊராட்சி மன்ற துணை தலைவர் அகத்தியன் துவக்கி வைக்கிறார். மேலும் பங்காரு அடிகளாரின் பிறந்த தினமான 3ம்தேதி காலை 10.50 மணிக்கு பங்காரு சித்தரின் திருப்பாதுகை, சிலைக்கு பாத பூஜை, அருள்தரிசனம் நடக்கிறது. மாலை 4.35 மணிக்கு மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விழா மலர் வெளியிடும் விழா நடைபெறுகிறது.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக இலங்கைக்கான தென்னிந்தியாவின் தூதரக துணை ஆணையர் கணேச நாதன் கீதீஸ்வரன், தமிழக அரசின் நில நிர்வாக துறை இணை ஆணையர் மேனகா, இஸ்ரோ துணை தலைவர் விஞ்ஞானி கண்ணு, சென்னை தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினர் ரவிச்சந்திரன் ராமசாமி மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பொறுப்பாளர்களும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.
