மாமல்லபுரத்தில் தலசயன பெருமாள் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் செல்லும் வழியில் தலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. கடந்த நவம்பர்-டிசம்பர் மாதம் பெய்த மழையில் குளத்தில் ஓரளவு தண்ணீர் தேங்கியது. அதன்பிறகு, குளம் முழுவதும் பாசி படர்ந்து அலங்கோலமாக காணப்பட்டது. மேலும், குளத்திற்கு சென்று கால் நனைக்க வரும் ஆன்மிக பக்தர்கள், அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் படர்ந்துள்ள பாசிகளை பார்த்து முகம் சுளித்து சென்றனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 2ம் தேதி மாசி மகத்தையொட்டி தெப்ப குளத்தில் இரவு தெப்ப உற்சவமும், மறுநாள் 3ம் தேதி காலை கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறள்ளது. எனவே, தலசயன பெருமாள் கோயில் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தெப்பகுளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என ஆன்மிக பக்தர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து, கடந்த 23ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தலசயன பெருமாள் கோயில் நிர்வாகம் மற்றும் பையனூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியும் இணைந்து தெப்பக்குளம் மற்றும் பூதத்தாழ்வார் குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி தூய்மைபடுத்தினர். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: