புழல் அருகே பைக் மீது லாரி மோதல் கல்லூரி மாணவர் பலி: டிரைவர் கைது

புழல்: புழல் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னை வியாசர்பாடி, சர்மா நகர், ஜி.என்.டி சாலையை சேர்ந்தவர் அப்துல் சத்தார். இவரது மகன் முகம்மது அலி இம்தியாஸ் (18). சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், செங்குன்றத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக, மதுரவாயல்-புழல் பைபாஸ் சாலை வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

கதிர்வேடு அருகே சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த டிரெய்லர் லாரி, முகமது அலி இம்தியாஸ் மீது வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் கல்லூரி மாணவர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து முகம்மது அலி இம்தியாசின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சியை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமார் (46) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: