அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் சர்வாதிகாரி இபிஎஸ் திமுகவில் இணைய எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை: தேர்தலில் வாய்ப்பளித்தால் நிச்சயம் போட்டியிடுவேன் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

சென்னை: சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுவிட்டார். திமுகவில் இணைய எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா ஆரம்பித்த தாய்க்கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்துக்கொண்டுள்ளேன். அரசியலில் ஒரு சர்வாதிகாரியாக ஆணவப்போக்குடன் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இனி எந்த காலத்திலும் வெற்றி பெறமுடியாத சூழ்நிலையை அதிமுகவிற்கு உருவாக்கி உள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தளபதியின் தலைமையை ஏற்று திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். ஒரு அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு மு.க.ஸ்டாலின் திமுகவை வழிநடத்தி செல்கின்றார். கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து துறைகளிலும், அனைத்து நிலைகளிலும் நின்று ஒரு சிறப்பான ஆட்சியை முதல்வர் தமிழக மக்களுக்கு தந்துகொண்டு இருக்கிறார் என்பதை நாடு உன்னிப்பாக கவனித்துக்கொண்டுள்ளது.

அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக உள்ள சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுகொண்டு இருக்கிறார். அதனால் தான் அதிமுக தொண்டர்கள் தற்போது திமுகவில் இணைந்து கொண்டுள்ளனர். திராவிட இயக்கத்தை காக்க, திராவிட கொள்கையை காக்க திமுகவே ஒரு தலைசிறந்த இயக்கமாகும். திமுகவில் ஒரு தொண்டனாக இணைந்துள்ளேன். ஒரு தொண்டன் எவ்வாறு இந்த இயக்கத்திற்காக பாடுபடுவானோ அதேபோல் நானும் பாடுபடுவேன்.

திமுகவில் நான் இணைந்தது சுயமாக சிந்தித்து கடந்த கால நிகழ்வுகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்பதற்காக எடுத்தவை. எனக்கு எந்தவித அழுத்தமும் இல்லை, அச்சுறுத்தலும் இல்லை, அச்சமுமில்லை, கட்டாயமும் இல்லை. அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கு அதிமுகவிற்கு இல்லை. திமுகவிற்கு ஏதெனும் பிரச்னை வரும் என்று சொன்னால் அதனை காப்பாற்றுகின்ற பொறுப்பு மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து தான் இன்றைக்கு திமுகவில் இணைந்துள்ளேன்.

சட்டமன்ற தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் வாய்ப்பு தந்தால் நிச்சயம் போட்டியிடுவேன். ஒரு இயக்கத்தை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் அனைத்து தரப்பட்ட மக்களால் பாராட்டப்பட வேண்டும். எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த வேண்டும். அதனை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதனை நிறைவேற்றி தருகிறார்.

திமுகவில் இணைந்ததற்கு எனக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சரியான முடிவை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துகள் என கூறியுள்ளனர். யார் நல்லது செய்கிறார்களோ அவர்களை பாராட்ட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தாய்மார்களால் பாராட்டப்படுகிறது. திமுகவில் இணைந்துள்ளேன். அதனால் கடந்த காலத்தை பற்றி எனக்கு கவலையில்லை. அதிமுகவிற்கு எதிர்காலம் என்று ஒன்று இனி இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: