×

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 23 பேரும் விடுவிப்பு: சிபிஐ வாதங்கள் கற்பனையானவை; சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், தெலங்கானா முதல்வராக இருந்த கே.சந்திரசேகர ராவின் மகளும் பிஆர்எஸ் கட்சி எம்எல்சியுமான கவிதா உட்பட மொத்தம் 23 பேர் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை 12ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இருப்பினும் டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளதால், இடைக்கால ஜாமீன் கிடைத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலால் திகார் சிறையில் இருந்து வெளியில் வரமுடியாது சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏழு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

இதில் முன்னதாக துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா ஆகஸ்ட் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் அடிப்படையில் சுமார் 17மாதம் சிறவாசத்திற்கு பின்னர் வெளியில் வந்தார். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யயப்பட்டவர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஜாமீனில் வெளியில் வந்தனர். இருப்பினும் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பிரதான வழக்கானது ரோஸ் அவனீவ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்த நிலையில், வாதங்கள் அனைத்தும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

மேற்கண்ட வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிஜேந்திர சிங் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதில்,”டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கே.கவிதா உட்பட 23 பேர்களையும் வழக்கில் இருந்து விடுவிக்கிறோம். குற்றவியல் சதி எதுவும் கண்டறியப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர். யூகத்தின் அடிப்படையில் தான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சி.பி.ஐ கூறிய புகார் ஆதாரமற்றது. ஒப்புதல் வாக்கு மூலம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தியது அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிரானது மட்டுமில்லாமல் சட்டங்களை மீறும் செயல் ஆகும்.
மேலும் கலால் கொள்கையில் எந்தவிதமான பெரிய சதித்திட்டமோ அல்லது குற்றவியல் நோக்கமோ கிடையாது. மேலும் சிபிஐ வழங்கிய ஆவணங்கள் குற்றப்பத்திரிகையுடன் பொருந்தவில்லை. ஒப்புதல் வாக்குமூலத்தின் நகல் இன்னுமும் வழங்கப்படவில்லை. இது நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.

* சிபிஐ அதிகாரிகள் மீது விசாரணை
நீதிபதி ஜிஜேந்திர சிங் தனது தீர்ப்பில்,” ஆதாரம் இல்லாமல் வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறைவாரியான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் குல்தீப் சிங் மீது ஆதாரம் இல்லாமல் வழக்கில் சேர்க்கப்பட்டது குறித்து சிபிஐ அதிகாரிகள் மீது துறைசார்ந்த விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

* சுனிதா கெஜ்ரிவால் உருக்கமான பதிவு
இதையடுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவில்,”இந்த உலகில் ஒரு நபர் எவ்வளவு பெரிய சக்திவாய்ந்தவராக மாறினாலும், சிவ சக்தியை விட மேலானவராக யாராலும் இருக்க முடியாது. உண்மை எப்போதும் வெல்லும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

* மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டதை இந்தியா கூட்டணி கட்சிகள் வரவேற்று கொண்டாடி வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,” இந்தத் தீர்ப்பை ”நீதிக்கு கிடைத்த வெற்றி” என வர்ணித்துள்ளார். இதற்குப் பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், ”எங்கள் போராட்டத்தின் போது எப்போதும் துணை நின்றதற்காக திரு. மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதேப்போன்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ”மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இன்று(நேற்று) முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளை முடக்க போடப்பட்ட சதி அம்பலமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. உத்தவ் தாக்கரே தரப்பு தலைவர்களை பொருத்தமட்டில்,” இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கிற்கு இது ஒரு பாடம் என தெரிவித்துள்ளனர்.

* குலுங்கி குலுங்கி அழுத அரவிந்த் கெஜ்ரிவால்
தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதிமன்றத்தை விட்டு அரவிந்த் கெஜிர்வால் வெளியில் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதில்,” தீர்ப்பை கேட்டதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும், எனது கட்சி மீதும் சுமத்தப்பட்ட பழிச்சொற்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னை ஒரு ‘ஊழல்வாதி’ என்று முத்திரை குத்த அவர்கள் எவ்வளவோ முயன்றார்கள். ஆனால், நீதிமன்றம் உண்மையை நிலைநாட்டியுள்ளது. நான் ஒரு நேர்மையான மனிதன் என்பதை இன்று உலகம் உணர்ந்திருக்கும் என்று அவர் தழுதழுத்த குரலில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,”நான் ஊழல்வாதி அல்ல எனக்கூறி கண்னீர் விட்டு குலுங்கி குலுங்கி கதறி அழுதார். உடனே அவரை மனீஷ் சிசோடியோ கட்டியணைத்து தேற்றினார். இதைத்தொடர்ந்து கடவுள் நம்மோடு இருக்கிறார் என்றார்.

விடுவிக்கப்பட்ட 23 பேர் விவரங்கள்
1. அரவிந்த் கெஜ்ரிவால்
2. மனீஷ் சிசோடியா
3. கவிதா
4. அபிஷேக் பயின்பாலி
5. அருண் ராமச்சந்திர பிள்ளை
6. மூர்த்தி கௌதம்
7. சமீர் மகேந்திரரு
8. நரேந்திர சிங்
9. அமந்தீப் சிங் தால்
10. அர்ஜூன் பாண்டே
11. புஜ்ஜிபாபு
12. ராஜேந்த் ஜோஷி
13. தமோதர் பிரசாத் சர்மா
14. பிரின்சி குமார்
15. அரவிந்த் குமார் சிங்
16. சான்பிரீத்சிங்
17. விஜய் நாயர்
18. குல்தீப் சிங்
19. துரேஷ் பதக்
20. அமீத் அரோரா
21. விநோத் சௌவுகான்
22. ஆஷிஷ் சந்த் மாத்தூர்
23. சரத் சந்திரா

* நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்போம்: அன்னா ஹசாரே
நமது நாடு நீதித்துறையால் இயங்குகிறது. நீதித்துறை அமைப்புதான் நாட்டின் உச்ச அமைப்பு. நமது நாடு பல அரசியல் கட்சிகள், சாதிகள் மற்றும் மதங்களைக் கொண்ட ஒரு பெரிய நாடு, ஆனால் நீதித்துறை அமைப்பு காரணமாக அது இன்னும் சரியாக இயங்குகிறது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொடர்பு குறித்து நான் என்ன சொன்னேனோ, அந்த குற்றச்சாட்டுகள் காற்றில் பறந்தன. இப்போது நீதித்துறை அவருக்கு (தவறு) எந்தப் பங்கும் இல்லை என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது ஜனநாயகத்தில், நாம் நீதித்துறையை மதிக்க வேண்டும்.

* பாஜ கூட்டாளிகள் மீதான நடவடிக்கை மறைந்துவிடும்: காங்கிரஸ் பவன் கேரா
பாஜ ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு வடிவத்தை மாற்றும், ஒரு ஆசைப்படும் இச்சாதாரி பாம்பு. காங்கிரஸை தோற்கடிக்க, காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற ஒரே ஒரு வெறித்தனமான இலக்கிற்காக அது எந்த மட்டத்திற்கும் சாய்ந்துவிடும். 12 ஆண்டுகளாக, அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் மீது விஷத்தை கக்கினார்கள். இப்போது? மோடியே அதைப் புகழ்ந்து பேசுகிறார் – மரியாதைக்காக அல்ல, மாறாக காங்கிரஸை வீழ்த்துவதற்ாக அவர் இவ்வாறு பேசுகிறார். தேர்தல்கள் வருகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் மீதான வழக்குகள் திடீரென்று துரிதப்படுத்தப்படும். தமிழ்நாடு தேர்தலுக்குச் செல்வதால் ப. சிதம்பரம் ஏற்கனவே மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். குஜராத் மற்றும் பஞ்சாப் தேர்தல்களின் வெளிச்சத்தில் ஆம் ஆத்மி மற்றும் அவர்களின் வசதியான கூட்டாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அமைதியாக மறைந்துவிடும்.

* மக்களிடமிருந்து கெஜ்ரிவாலுக்கு
அரசியல் பதில் கிடைத்து விட்டது: பாஜ சுதான்சு திரிவேதி
டெல்லி மக்கள் அவருக்கு (கெஜ்ரிவால்) அரசியல் ரீதியாக ஒரு பதிலை வழங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட அமைப்பு தொழில்நுட்ப ரீதியாக மேல்முறையீடு செய்ய அடுத்த நடவடிக்கையை முடிவு செய்யும்.

Tags : Arvind Kejriwal ,Delhi ,CBI ,New Delhi ,Manish Sisodia ,Deputy Chief Minister ,Enforcement Directorate ,
× RELATED காங்கிரஸ் நிர்வாகிகள் கைது விவகாரம்;...