×

காங்கிரஸ் நிர்வாகிகள் கைது விவகாரம்; டெல்லி போலீசார் 24 மணி நேரம் சிறைபிடிப்பு: இமாச்சலில் அரங்கேறிய சட்டப்போராட்டம்

 

சிம்லா: இரு மாநில போலீசார் இடையே ஏற்பட்ட மோதலால் எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 20ம் தேதியன்று நடந்த உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் சட்டையின்றி பிரசாரம் செய்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஒன்றிய அரசு மற்றும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாசகங்கள் அடங்கிய சட்டைகளை அணிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய சவுரப் சிங், அர்பாஸ் கான் மற்றும் சித்தார்த் அவதூத் ஆகிய 3 பேரை கைது செய்ய அவர்களை டெல்லி போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில், இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள ரோஹ்ரு பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த அவர்களை பிடிக்க, டெல்லி போலீசார் சாதாரண உடையில் சென்றனர். உள்ளூர் போலீசாருக்கு முன்னதாக தகவல் தெரிவிக்காமல் அவர்களை அழைத்துச் சென்றதால், ஆட்கடத்தல் நடப்பதாக விடுதி உரிமையாளர் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் இமாச்சல போலீசார் டெல்லி போலீசாரின் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சுமார் 20 டெல்லி போலீசார் 24 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இரு மாநில போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நள்ளிரவு 1.30 மணி அளவில் சிம்லா நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ேநற்று அவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து காங்கிரஸ் தரப்பில், ‘அரசியல் சட்ட நடைமுறைகளை மீறி டெல்லி போலீசார் அத்துமீறியது துரதிர்ஷ்டவசமானது’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாஜகவோ, இமாச்சல அரசு குற்றவாளிகளை காப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

Tags : Delhi ,Imachal ,Shimla ,Global Artificial Intelligence Summit ,Delhi Bharat Hall ,congress ,
× RELATED திருமணத்திற்கு வாலிபர் மறுப்பு: பெண் யூ டியூபர் தற்கொலை