புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவது குறித்து, பட்ஜெட்டுக்குப் பிந்தைய பல இணையவழி கருத்தரங்கில் காணொலி மூலம் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குதல் என்ற பெரிய இலக்கை நோக்கிய ஒரு படியாக ஒவ்வொரு பட்ஜெட்டும் செயல்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நம்பிக்கை சார்ந்த சீர்திருத்தங்கள் காரணமாக நாடு தற்போது சீர்திருத்த எக்ஸ்பிரஸில் சவாரி செய்து வருகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் கோடியாக இருந்த பொது மூலதனத்தை 2026-27 பட்ஜெட்டில் ஒன்றிய அரசாங்கம் ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளது.
இந்த அதிக மூலதன ஒதுக்கீடு தனியார் துறை புதிய வீரியத்துடன் முன்வருவதற்கான ஒரு சமிக்ஞையாகும். 2026-27 பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தையும் தொழில்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா நிறுவனங்கள் புதிய முதலீடு, புதுமைகளுடன் முன்வர வேண்டும்; நிதி நிறுவனங்கள் நடைமுறை தீர்வுகளை வடிவமைக்கவும் சந்தை நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவ வேண்டும். அரசாங்கம், தொழில்துறை மற்றும் அறிவுசார் கூட்டாளிகள் ஒன்றிணையும்போது, சீர்திருத்தங்கள் முடிவுகளாக மாறும். காகிதத்தில் வரும் அறிவிப்புகள் களத்தில் சாதனைகளாக மாறும். உள்கட்டமைப்பு விரிவாக்கம், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தொடர்பான பட்ஜெட் முடிவுகள் தேசிய பொருளாதாரத்திற்கு நிரந்தர பலத்தை அளிக்கின்றன.இவ்வாறு பிரதமர் பேசினார்.
