×

காங்கிரசாரால் தாக்கப்பட்டதாக கூறி சிகிச்சை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் டிஸ்சார்ஜ்: நர்சுகளுடன் எடுத்த செல்பியால் சர்ச்சை

திருவனந்தபுரம்: கண்ணூர் ரயில் நிலையத்தில் வைத்து காங்கிரஸ் மாணவர் அமைப்பினரால் தாக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜுடன் நர்சுகள் எடுத்த செல்பியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் கண்ணூர் ரயில்நிலையத்தில் வைத்து காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது வீணா ஜார்ஜ் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பின் நேற்று அதிகாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் வீணா ஜார்ஜுடன் 3 நர்சுகள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் அமைச்சர் வீணா ஜார்ஜின் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே சமூக வலைதளங்களில் அமைச்சருடன் எடுத்த செல்பியை வெளியிட்ட நர்ஸ் ஸ்மிதா கூறியது: அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு காயம் ஏற்படவில்லை என்றும், அவர் நாடகமாடுகிறார் என்று கூறுவதிலும் எந்த உண்மையையும் கிடையாது. ஒரு சில மணிநேரத்திலேயே நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். அதனால் தான் தைரியமாக செல்பி எடுத்தோம் என்றார்.

Tags : Kerala ,Health Minister ,Veena George ,Thiruvananthapuram ,Congress ,Kannur train station ,
× RELATED காங்கிரஸ் நிர்வாகிகள் கைது விவகாரம்;...