திருவனந்தபுரம்: மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டது மற்றும் 6 பேருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் வழியில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், நடிகையின் காரை ஓட்டிய மார்ட்டின், முன்னாள் டிரைவர் பல்சர் சுனில்குமார் என்பவர் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியதாக பிரபல நடிகர் திலீப் திலீப் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 7 வருடங்களுக்கு மேலாக எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த வருடம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பல்சர் சுனில்குமார், மார்ட்டின் உள்பட 6 பேருக்கு 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சதித்திட்டம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நடிகர் திலீப் உள்பட 4 பேர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நேற்று அப்பீல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பது: சதித்திட்டம் தீட்டியதற்கு நடிகர் திலீப்புக்கு எதிராக முக்கியமான ஆவணங்கள் உள்ளன. இது தொடர்பான சாட்சியங்களை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. விசாரணை நீதிமன்ற நீதிபதி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளார். குற்றவாளிகள் 6 பேருக்கும் மிகவும் குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அப்பீல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
