×

மெக்சிகன் ஓபன் டென்னிஸ் அலெஜான்ட்ரோவை வீழ்த்தி அசத்திய மாத்தியா பெலுச்சி

அகாபுல்கோ: மெக்சிகன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று, இத்தாலி வீரர் மாத்தியா பெலுச்சி, ஸ்பெயின் வீரர் அலெஜான்ட்ரோ டேவிடோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மெக்சிகோவின் அகாபுல்கோ நகரில் மெக்சிகன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டி ஒன்றில் இத்தாலி வீரர் மாத்தியா பெலுச்சி – ஸ்பெயினை சேர்ந்த உலகின் 14ம் நிலை வீரர் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் மோதினர்.

போட்டியின் துவக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய மாத்தியா, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிச் மோதினர். முதல் செட்டில் மியோமிர் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.

டைபிரேக்கர் வரை சென்ற 2வது செட்டை, 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் ஸ்வெரெவ் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 3வது செட்டும் டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் மியோமிர் வசப்படுத்தி அதிர்ச்சி தந்தார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags : Azatiya Mattia Bellucci ,Alejandro ,Mexican Open tennis ,Acapulco ,Mexican Open ,Italy ,Mattia Bellucci ,Alejandro Davidovich ,Acapulco, Mexico ,
× RELATED டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று:...