அகமதாபாத்: உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றுப் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. அதில் தென் ஆப்ரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய வெ.இ. அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான கேப்டன் ஷாய் ஹோப் 16 ரன்னிலும், அடுத்து வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.
மற்றொரு துவக்க வீரர் பிராண்டன் கிங் (21 ரன்) லுங்கி நிகிடியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்தோர் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், 10.2 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழந்து 83 ரன்னுடன் பரிதவித்தது. அந்நிலையில் இணை சேர்ந்த ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெபர்ட், சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். இந்த இணை, 57 பந்துகளில் 89 ரன் விளாசிய நிலையில் ஜேசன் (49 ரன்) ஆட்டமிழந்தார்.
20 ஓவரில் வெ.இ. 8 விக். இழப்புக்கு 176 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்காவின் கேப்டன் அய்டன் மார்க்ரம், குவின்டன் டிகாக் 7.6 ஓவரில் 95 ரன் குவித்தனர். அப்போது, டிகாக் (24 பந்து, 47 ரன்) ஆட்டமிழந்தார். பின் இணை சேர்ந்த மார்க்ரம் (46 பந்து, 82 ரன்), ரையான் ரிக்கெல்டன் (28 பந்து, 45 ரன்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் தென் ஆப்ரிக்கா ஸ்கோரை, 16.1 ஓவரில் ஒரு விக். இழப்புக்கு 177 ரன் ஆக உயர்த்தி மெகா வெற்றி பெறச் செய்தனர்.
