சென்னை: உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 72 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்று போட்டி சென்னையில் நேற்று நடந்தது. அதில் ஜிம்பாப்வே அணியுடன் இந்தியா மோதியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீசியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா துவக்கம் முதல் அதிரடியாக ரன்களை குவிக்கத் துவங்கினர்.
இந்த இணை 3.4 ஓவரில் 48 ரன்கள் விளாசிய நிலையில் 24 ரன்னில் சாம்சன் அவுட்டானர். பின், அபிஷேக், இஷான் கிஷண் இணை சேர்ந்து ஜிம்பாப்வே பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இஷான், 24 பந்துகளில் 38 ரன்கள் குவித்த நிலையில் சிக்கந்தர் ராஸா பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து, சிறப்பாக ஆடி 55 ரன்கள் விளாசியிருந்த அபிஷேக் சர்மா (30 பந்து, 4 சிக்சர், 4 பவுண்டரி), 13வது ஓவரில் வீழ்ந்தார்.
அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், 13 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், ஹர்திக் பாண்ட்யா (23 பந்து, 50 ரன்), திலக் வர்மா (16 பந்து, 44 ரன்) இணை சேர்ந்து, 5வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் .. ரன் விளாசினர். 20 ஓவர் முடிவில் இந்தியா 4 விக். இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து 72 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பென்னெட் 59 பந்தில் 97 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சாளர் அர்ஷதீப் 3, வருண், அக்சர், துபே தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது.
* அபிஷேக் அதிரடி
நடப்பு உலகக் கோப்பை டி20 போட்டிகள் துவங்கியது முதல் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சரிவர ரன் எடுக்க முடியாமல் திணறி வந்தார். சில நாட்களுக்கு முன் அவரது வயிற்றில் ஏற்பட்ட தொற்று பிரச்னையால் மருத்துமனையில் சிகிச்சையும் பெற நேரிட்டது. அதன் பின்னர் அவர் ஆடிய போட்டிகளிலும் சொற்ப ரன்களே எடுத்ததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில், ஜிம்பாப்வே அணியுடன் நேற்று நடந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் அபிஷேக் மீண்டும் அதிரடி காட்டி இயல்பு ஆட்டத்துக்கு திரும்பி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். 26 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் தொட்ட அவர், கடைசியில் 30 பந்தில் 55 ரன் எடுத்த நிலையில் மபோஸா பந்தில் ஆட்டமிழந்தார்.
