திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ திருவிழா ஆலோசனை கூட்டம் வரும் 24ம் தேதி தேர் திருவிழா

திருவலம், பிப்.9: திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், வருகிற 24ம் தேதி தேர் திருவிழா நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. காட்பாடி அடுத்த திருவலத்தில் பழமை வாய்ந்த வில்வநாதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரமோற்சவ தேர் திருவிழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டிற்கான பிரமோற்சவ திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கோயிலில் நேற்று நடந்தது. வேலூர் ஆர்டிஓ கணேஷ் தலைமை வகித்தார். காட்பாடி தாசில்தார் பாலமுருகன், துணை தாசில்தார் முரளிதரன், திருவலம் எஸ்ஐ நாராயணன், கோயில் செயல் அலுவலர் சிவா முன்னிலை வகித்தனர். அப்போது ஆர்டிஓ பேசுகையில், ‘கொரோனா ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் கோயில் முன்பு கடைகள் அமைக்கக்கூடாது. பக்தர்களுக்கு பிரசாதம், தீர்த்தம் வழங்கக்கூடாது. பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோயிலுக்குள் தேங்காய், பழம், பிரசாதம் போன்றவைகள் எடுத்து வர அனுமதியில்லை. அதிகளவில் கூட்டம் சேர்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து மின் சப்ளை, குடிநீர், தீயணைப்புத்துறை, சாலைகள் சீரமைப்பு, சுகாதாரம் போன்ற துறைகளை சேர்ந்த அலுவலர்கள் அதற்கான ஏற்பாடுகள் குறித்து விளக்கி கூறினர். இதையடுத்து, வருகிற 18ம் தேதி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றுதல், மாட வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி திருவீதி உலா, 24ம் தேதி தேர் திருவிழா நடைபெறவுள்ளதாக முடிவு செய்யப்பட்டது. இதில், திருவலம் பேரூராட்சி செயல் அலுவலர் எழிலரசி, மின்வாரிய இளநிலை பொறியாளர் ராஜா, காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பால்பாண்டி, மேலாளர் நித்தியானந்தம் உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.

Related Stories: