பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு விவகாரத்தில் சி.வி.சண்முகத்திற்கு எதிரான மகளிர் ஆணைய பரிந்துரை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், சில மாதங்களுக்கு முன் விழுப்புரத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சென்னையைச் சேர்ந்த பிரமிளா மற்றும் ராதிகா ஆகியோர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை விசாரித்த ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.க்கு 2025 நவம்பர் 11ம் தேதி பரிந்துரைத்திருந்தது.

இதை எதிர்த்து சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, விசாரணைக்கு ஆஜராகக் கூறி மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. ஆணையத்தின் பிற ஊப்பினர்க்ளுடன் கலந்தாலோசிக்காமல் குற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆணைய தலைவர் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்று வாதிட்டார். இதற்கு காவல் துறை தரப்பில், மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் விவரங்களை தெரிவிக்க அவசியமில்லை.

ஆணையம் தற்போது பரிந்துரை மட்டுமே அனுப்பியுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என்று இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மகளிர் ஆணையம் தரப்பில், ஆணைய தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் அமர்வு தான் குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து. தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மகளிர் ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் நடைமுறை தவறுகள் உள்ளதாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories: