அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் சக வீரரான காதலனை குத்திக்கொன்ற வீராங்கனை: பகீர் வாக்குமூலம்

ஜெபர்சன் சிட்டி: மிசூரி மாநில பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்தது. அமெரிக்காவின் ஜெபர்சன் சிட்டி பகுதியில் உள்ள லிங்கன் பல்கலைக்கழகத்தில் மூத்த தடகள வீரர்களாக ஜமைக்காவைச் சேர்ந்த கொவான் கோல்ட்சன் (21) மற்றும் கயானாவைச் சேர்ந்த டெனிடா ஜாக்சன் (21) ஆகியோர் பயின்று வந்தனர். இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 23ம் தேதி அதிகாலை 1.09 மணிக்கு இவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வெளியே கொவான் கோல்ட்சன், மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் கத்திக் குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக அவரது காதலியான டெனிடா ஜாக்சன் கைது செய்யப்பட்டு கோல் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் அவர் தற்காப்புக்காக இந்த செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ள நிலையில், முதற்கட்டமாக முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்கை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்து டெனிடா ஜாக்சன் கூறுகையில், ‘எங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது என்னை அவர் தாக்கியதால் தற்காப்புக்காக கத்தியை பயன்படுத்தினேன்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் டெக்சாஸ் தடகளப் போட்டியில் ஆஸ்டின் மெட்கால்ஃப் என்ற வீரர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் கார்மெலோ ஆண்டனி என்பவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. அதேபோல் கடந்த 5ம் தேதி டென்னசி பகுதியில் தனது காதலியை கொன்ற வழக்கில் முன்னாள் கால்பந்து வீரர் டாரன் லீ கைது செய்யப்பட்டார். இத்தகைய தொடர்ச்சியான சம்பவங்களுக்கு மத்தியில், தற்போது மிசூரி மாநிலத்தின் லிங்கன் பல்கலைக்கழகத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

Related Stories: