நிலக்கோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப இடைக்கால தடை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை, பிப்.9: கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்ப ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள புதுப்பட்டியை சேர்ந்த வசந்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நிலக்கோட்டை தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு அக்.12ல் கலெக்டரால் வெளியிடப்பட்டது. 8 காலியிடங்களுக்கு உரிய தகுதிகளுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து புதுப்பித்திருக்க வேண்டும். 2 கி.மீ தொலைவிற்குள் இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத்ெதரிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. நிலக்கோட்டை தாசில் தார் அலுவலகத்தில் விண்ணப்பம் கேட்டு அணுகினேன். நான், உயர்கல்வித் தகுதி பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்ட கிராம எல்லைக்குள் இல்லை எனவும் கூறி விண்ணப்பம் தர மறுத்துவிட்டனர். இது 2015ம் ஆண்டின் அரசாணைக்கு எதிரானது. எனவே, கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பு சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்து, விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டு கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகி, காலியிடம் உள்ள கிராமத்தின் 2 கி.மீ சுற்றளவில் இருக்க வேண்டும் என்பது பழைய விதி. ஆனால், 2015ம் ஆண்டின் புதிய திருத்த விதிப்படி அந்த தாலுகாவிற்குள் இருந்தாலே போதுமானது.  புதிய விதியை பின்பற்றாமல், பழைய விதிப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது சட்டவிரோதம் என்றார். இதையடுத்து, கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, மனுவிற்கு கலெக்டர் மற்றும் தாசில்தார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.11க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: