திருத்தணி: திருத்தணியில், தார்ப்பாய் போட்டு மூடாமல் அதிக பாரத்துடன் டிப்பர் லாரிகளில் ஏற்றிச் செல்லும் கிராவல் மண் சிதறி, மாநில நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்று விபத்துகளை ஏற்படுத்தி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். திருத்தணி நகராட்சிக்குட்பட்ட, அமிர்தபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரியில் அரசு அனுமதியுடன் கிராவல் மண் ராட்சத கிரேன்கள் மூலம் அள்ளப்பட்டு, டிப்பர் லாரிகளில் நிரப்பிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலை பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தினமும் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் அதிக பாரத்துடன் கிராவல் மண் தார்பாய் போட்டு மூடாமல், அதிக வேகத்துடன் திருத்தணி-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் இருந்து திருத்தணி நகரில் சென்று சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால், டிப்பர் லாரிகளில் இருந்து மண் சாலையில் சிதறி சாலை முழுவதும் கொட்டியிருப்பதால், மாநில நெடுஞ்சாலை வேகமாக சேதமடைந்து வருகிறது. இதனால், பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் அதிக அளவில் விபத்துகள் நடைபெற்று வருகிறது. மாநில நெடுஞ்சாலை சேதமடைந்து விபத்துகள் அதிகரித்து வந்தாலும் நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். புதிதாக அமைத்த நெடுஞ்சாலை டிப்பர் லாரிகளால் சேதமடைவதை தடுத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சேதமடையும் சாலை
மாநில நெடுஞ்சாலையில் டிப்பர் லாரிகளில் ஜல்லி, மண் உள்ளிட்டவை அளவுக்கு அதிமாக எடுத்து செல்லும் போது பள்ளங்களில் ஏறி இறங்கும்போது சிதறுவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பாரம் தாங்காமல் சாலை சேதமடைந்து வருகிறது. இதனால், சிறு பள்ளங்கள் முதல் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
