பழவேற்காடு கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளால் பரபரப்பு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை

பொன்னேரி: பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் ஆங்காங்கே கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடலோர பகுதிகளில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்கடல் பகுதியில் உள்ள கடல் ஆமைகள், ஆண்டுதோறும் ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு கடலுக்கு செல்வதும், பின்னர் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து, பொரிப்பகத்தில் வைத்து அடைகாத்து குஞ்சு பொரித்த பின் கடலில் விடுவது வழக்கம்.

பழவேற்காடு கடற்கரை பகுதியில், முகத்துவாரம் முதல் காட்டுப்பள்ளி துறைமுகம் வரையில் கடல் ஆமைகள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு முட்டையிட்டு செல்கின்றன. கடல் ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பழவேற்காடு முகத்துவாரம் முதல் காட்டுப்பள்ளி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் இறந்த நிலையில் பல கடல் ஆமைகள் கரை ஒதுங்கி வருகின்றன. இன்றும் பழவேற்காடு கலங்கரை விளக்கம் பின்புறம் ஏராளமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்படும் ஆமைகளை கால்நடைத்துறை மருத்துவர்கள் உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆமைகள் முட்டையிட கடற்கரை பகுதிகளை நோக்கி வரும் போது படகுகளில், வலைகள் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குகிறதா அல்லது ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதால், ஆமைகள் இறந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: