போதமலையில் காட்டுத்தீ அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசம்

நாமகிரிப்பேட்டை : நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள போதமலை பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மலைப்பகுதியில் ராகி, கொள்ளு, உளுந்து உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை சாகுபடி செய்து வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை முதலே கடும் வெயில் நிலவியது. வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த சூழலில் மாலை வேளையில் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது.

முதலில் சிறிய அளவில் தென்பட்ட தீ, காற்றின் வேகத்தால் மள மளவென பரவி விரிந்தது. இதில், அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் சிறு மரங்கள் எரிந்து நாசமாயின.இதுகுறித்த தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று அங்குள்ள மக்கள் உதவியுடன் எதிர் தீ மூட்டி போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டுத்தீ குறித்த காரணங்களை ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: