*தேமல் நோயை கட்டுப்படுத்த வேளாண் துறை விளக்கம்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு முன்பே வயலில் உளுந்து விதை விதைக்கப்படுவதால் ஏற்படும் தேமல் நோயை கட்டுப்படுத்த வேளாண்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இது குறித்து புதுக்கோட்டை வேளாண் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,புதுக்கோட்டை மாவட்டத்தில் உளுந்து விதைப்பு நெல் அறுவடைக்கு முன்பாக செய்யப்படுகிறது.
அதாவது நெல் அறுவடைக்கு 7-லிருந்து 10 நாட்கள் முன்னதாகவே அதே வயலில் விதைக்கப்படும் உளுந்து, அறுவடையின்போது வளர்ந்து நிற்கும். இத்தகைய மிதி உளுந்து பயிரிலும், அறுவடைக்கு பின்பு விதைப்பு செய்யப்பட்ட உளுந்து பயிரிலும் மஞ்சள் தேமல் நோயின் தாக்கம் ஆங்காங்கே தென்படுகிறது.
இந்நோய் வைரஸ் எனும் நச்சுயிரியால் தோற்றுவிக்கப்படுகிறது. மிகச்சிறிய வெள்ளை ஈக்கள் மூலம் இந்நோய் பரவுகின்றது. இந்நோய்க்கான அறிகுறிகளாவன, பாதிக்கப்பட்ட உளுந்து பயிரின் இளம் இலைகளில் மஞ்சள் நிற பாதிப்புகள் காணப்படும்.
ஆரம்பத்தில் சிறிய மஞ்சள் நிற திட்டுகளாக தோன்றி பின் விரைவில் இலைகள் முழுவதும் பரவி மஞ்சள் இலைகளாக காட்சியளிக்கும். பாதிக்கப்பட்ட பயிர்களில் நச்சுயிரிகளை பரப்பக்கூடிய வெள்ளை ஈக்கள் காணப்படும். எனவே நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து மஞ்சள் தேமல் நோயை கட்டப்படுத்த வேண்டும்.
வரும் நாட்களில் விதைப்பு செய்ய இருப்பவர்கள், உளுந்து, விதைகளை இமிடாகுளோபிரிட் 600 எப் எஸ் எனும் மருந்தினைக் கொண்டு ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். முன்பே விதைக்கப்பட்டு 20-லிருந்து 30 நாட்களான உளுந்து வயலில் தற்பொழுது மஞ்சள் தேமல் நோயின் தாக்கம் தென்படுகின்றது.
எனவே வரப்புகளில் களைகள் இன்றி பராமரிக்கப்பட வேண்டும். இந்நோயை பரப்பக்கூடிய (வெள்ளை ஈ) பூச்சிகளைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை (ஏக்கருக்கு ஐந்து எண்ணிக்கை) உபயோகிக்கலாம். வேப்ப எண்ணெய் மூன்று சதவீத கரைசலை (30 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு) தெளித்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
ரசாயன மருந்துகளான மிதைல் டெமட்டான் 25 இசி (ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு) அல்லது இமிடா குளோபிரிட் 17.8 எஸ்எல் (2.5 மில்லி ஐந்து லிட்டர் தண்ணீருக்கு) என்ற அளவில் இலைவழித் தெளிப்பாகக் கொடுப்பதன் மூலம் நோய் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
இத்தகைய நோய்க் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் பயறு வகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தப்படுவதோடு அருகாமையில் உள்ள மற்ற உளுந்து வயல் பகுதிகளுக்கு இந்நோய் பரவாமல் தடுக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
