நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கிய பின்னர் நடத்திய மாநாடு, பிரசாரங்களில் இதுவரை 52 பேர் உயிரிழந்து உள்ளனர். பல மணி நேரம் வெயிலில் காத்திருப்பதால் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதனால், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் நேற்று நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பந்தல் அமைக்கப்பட்டு, சேர்கள் போடப்பட்டு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க சென்னையில் இருந்து கார், வேனில் மாறி மாறிய வேலூருக்கு பயணம் செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பைபாஸ் சாலை தனியார் பொறியியல் கல்லூரி எதிரே நேற்று காலை 10:30 மணி அளவில் விஜய் கடந்து சென்ற பிறகு அங்கு தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எந்த வாகனமும் செல்ல முடியாதபடி கைகளை கோர்த்தபடி சாலையில் நின்று வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அவசர தேவைக்கு சென்ற வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கால் மணி நேரத்திற்கு பிறகு வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.
பள்ளிகொண்டா டோல்கேட் அருகே விஜய் வேன் வந்தபோது, அங்கிருந்த ரசிகர் ஒருவர் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் விஜய் வேன் முன் படுத்து அட்ராசிட்டி செய்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த ரசிகரை எழுப்பி அங்கிருந்து விரட்டினர். மேலும் சிலர் வேன் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் முன் இருக்கையில் இருந்த விஜய், உள்ளே சென்று தலையை மட்டும் தெரிவது போல் ரசிகர்களை பார்த்து கையை அசைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது ரசிகர்களும், ரசிகைகளும் ஏறி நின்று ரகளையில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், கியூஆர் கோடுடன் கூடிய அட்டை வழங்கப்பட்டது. கூட்ட அரங்கத்திற்கு முன்பு நின்றிருந்த போலீசார் சம்பந்தப்பட்ட அட்டைகளை ஸ்கேன் செய்து, அனுமதி பெற்ற நிர்வாகிகளை மட்டும் உள்ளே அனுமதித்தனர். அப்போது அனுமதி அட்டை இல்லாதவர்களும் இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு, உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் போலீசாரை தள்ளியபடி உள்ளே சென்றனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அனுமதி அட்டை இல்லாதவர்கள் அருகிலிருந்து மலைப்பகுதி நிலப்பகுதி வழியாக கூட்டம் கூட்டமாக ஆபத்தான முறையில் சென்றனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். மைதானம் அருகே இருந்த தனியார் கம்பெனியின் காம்பவுண்ட் சுவரை சில பேர் ஏறி குதித்து உள்ளே புகுந்ததால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும்போது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், உள்ளே சென்றவர்கள் அங்குள்ள நிழல்பந்தலில் உள்ள சேர்களில் உட்காராமல் சேர்கள் மீது ஏறி நின்று கூச்சல் போட்டபடி இருந்தனர்.
நிர்வாகிகள் சந்திப்பில் 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தவெக சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் அனுமதி அட்டை பெறாத தவெகவினர் சிலர் கலர் ஜெராக்ஸ் எடுத்து கூட்டத்திற்கு 15 ஆயிரம் பேர் வரை வந்து கூடினர். இதனால் ஒரிஜினல் பாஸ் வைத்திருந்த தவெகவினர், தங்களை உள்ளே அனுமதிக்காததால் பாஸ்களை கிழித்து எறிந்துவிட்டு சென்றனர். ரசிகர்கள் பலரும் உயரமான மரம், ஸ்பீக்கர் கட்டிய கம்பங்கள், கட்டிடங்களில் ஏறி நிற்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. விஜய் பேச்சை முடித்துவிட்டு கிளம்பியபோது, அவரை பின் தொடர்ந்து சென்று பைக்கில் அட்டகாசம் செய்த ரசிகர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
* போக்குவரத்து இடையூறாக கிரேனில் மாலை: 2 பேர் கைது
பள்ளிகொண்டா சுங்கசாவடியில் நிர்வாகிகள் சிலர் கிரேன் மூலம் விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவிக்க ஏற்பாடு செய்திருந்தனர். ஏற்கனவே அதிகளவில் ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் திக்குமுக்காடிய நிலையில், மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் போலீசார் கிரேன்இயக்கி வந்த மேல்மாயில் பகுதியை சேர்ந்த முனிரத்தினம்(54) மற்றும் தவெக நிர்வாகி குடியாத்தம் தாலுகா தாட்டிமானப்பள்ளியை சேர்ந்த ஏழுமலை(38) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
