திமுக குழுவிடம் பேசி தொகுதிகள் இறுதி செய்வோம்: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதி என்பதை திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் பேசி இறுதி செய்வோம் என்று மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்லையொட்டி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. 2 நாட்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக, மதிமுக ஆகிய 3 கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை என்பது சுமுகமாக நடந்தது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நடத்த உள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று முன்தினம் இரவு திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் உடனிருந்தனர். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள சூழலில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்பிக்கள், நிர்வாகிகள் பேச்சால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் திடீரென சலசலப்பு என்பது இருந்தது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பாக இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியை சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று திடீரென சந்தித்து பேசினர். அப்போது செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை கனிமொழி எம்பியிடம் வழங்கினார். தொடர்ந்து கனிமொழியிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் கிரிஷ் சோடங்கரும், செல்வப்பெருந்தகையும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டியில், ‘‘ நாங்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். மாநிலங்களவை ‘சீட்’ மற்றும் உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு குறித்து ஆலோசித்தோம். சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் பேசி தொகுதிகளை இறுதி செய்வோம். பேச்சுவார்த்தைக்கு திமுக குழு அழைக்கும் தேதிக்காக காத்திருக்கிறோம். அதிகாரப்பகிர்வை விட, முதலில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது பற்றி பேசினோம்” என்றார். செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், ‘‘திமுக தொகுதி பங்கீட்டு குழுவை மிக விரைவில் சந்திப்போம்” என்றார்.

Related Stories: