நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவமனை தகவல்

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு (101). சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தூணாக விளங்கியவர். அவரது நீண்டகால அரசியல் பங்களிப்பு தொழிலாளர், விவசாயிகள் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. தற்போது வயது முதிர்ச்சி காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து அவர் சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சை முடிந்து கடந்த மாதம் குணமடைந்து வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

பின்னர் உடனடியாக அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூத்த மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். தொடர் சிகிச்சையில் இருந்து வந்தாலும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: