சீமானுக்காக களமிறங்கும் குடும்பத்தினர்

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.மாங்குடி 75,954 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக தலைமையிலான பாஜ கூட்டணியில் போட்டியிட்ட எச்.ராஜா 54,365 வாக்குகள் பெற்றார். அதேபோன்று அமமுக சார்பில் தேர்போகி பாண்டி போட்டியிட்டு 44,864 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட துரைமாணிக்கம் 23,872 வாக்குகளும் பெற்றனர். இதில் நாம் தமிழர் கட்சி 11.24 சதவீதம் வாக்குகளுடன் 4ம் இடம் பெற்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சென்னை திருவொற்றியூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் அவர் 48 ஆயிரத்து 597 வாக்குகள் பெற்று திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்தபடி 3வது இடம் பிடித்தார். 24.43 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தாலும் கூட, இம்முறை அவர் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. எதிர்பார்த்தது போலவே, காரைக்குடி தொகுதியில் இம்முறை போட்டியிடப் போவதாக சீமான் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக பிரசாரத்தில் தனது குடும்ப உறுப்பினர்களை விரைவில் களத்தில் இறக்க உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் நடந்த மாநாட்டிற்கு கூட சீமான் தாயார் அன்னம்மாள், அவரது சொந்த ஊரான இளையாங்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் வீதி, வீதியாகச் சென்றும் வீடு வீடாக சென்றும், ‘21ம் தேதி திருச்சியில் நடக்க உள்ள கூட்டத்திற்கு கண்டிப்பாக குடும்பத்தோட வந்திடணும்’ என்று கூறி, மாநாட்டு அழைப்பிதழை வெற்றிலை, பாக்கு வைத்து கொடுத்தார். கிராமத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கு தட்டில் பழங்கள் வைத்தும் பத்திரிகை விநியோகம் நடந்திருக்கிறது. காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இத்தொகுதியின் மீது தற்போது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது.

Related Stories: