என்டிஏவில் யாருக்கு எவ்வளவு சீட்? தலையை பிச்சிக்கும் பியூஸ்-எடப்பாடி: 26ம் தேதி பைனல் டீல்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணியை முடித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக, ஓராண்டுக்கு முன்பே அதிமுக – பாஜ கூட்டணி அமைந்த நிலையில் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கு, பாஜ அதிக தொகுதிகளை கேட்டு அதிமுகவுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. 50 முதல் 60 தொகுதிகள் வரை கேட்பதாக வரும் தகவல்கள் அதிமுகவினர் மத்தியில் பாஜ மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி அமைத்து நீண்ட நாட்களாக எந்த கட்சிகளும் சேராத நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் சில நாட்கள் முகாமிட்டு கூட்டணி தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தினார். இதை தொடர்ந்து பாமக மற்றும் அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தன. ஆனால் அதற்கு பிறகு முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையவில்லை. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜவுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்யவும் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் வரும் 26ம்தேதி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அதிமுக, பாஜ, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வருவதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் ஏற்ற பாஜ தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கவே ஒன்றிய அமைச்சரும், பாஜ தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது சென்னை அமைந்தகரையில் தேர்தல் பணிமனை திறப்பு விழாவிலும் பியூஷ் கோயல் பங்கேற்கிறார். எனவே, அவரது வருகையின் போது, அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை இறுதி வடிவம் பெறும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி முக்கிய தலைவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. எனவே பியூஷ் கோயல் வருகை என்பது பாஜ, அதிமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பியூஸ்கோயலுக்கு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் வருகிற 26ம் தேதி அவர் வராவிட்டால் அவருக்கு பதில் வேறு ஒன்றிய அமைச்சர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவர் கூட்டணி பேச்சை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: