சங்கராபுரம், பிப். 24: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 5 வினாடிகள் இந்த நில அதிர்வு இருந்துள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியேறி வந்து சாலையில் நின்றனர். பின்னர் அவர்கள் நில அதிர்வு குறித்த தகவலை பரிமாறிக்கொண்டனர். இதுபோன்று சங்கராபுரம் பகுதியில் உள்ள சேஷசமுத்திரம், நெடுமானூர், சங்கராபுரம், ஊராங்கனி, சவுந்தரவல்லிபாளையம், பாண்டலம், குளத்தூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் இந்த நில அதிர்வு இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
