×

புதுச்சேரி பாகூரில் பரபரப்பு காகங்கள் அடுத்தடுத்து இறப்பு பறவை காய்ச்சலா? பொதுமக்கள் அச்சம்

பாகூர், பிப். 19: சென்னையில் கடந்த மாதம் அடையாறு இந்திரா நகர் பூங்கா மற்றும் நீலாங்கரை பகுதிகளில் காகங்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தன. தற்போது வரை, ஆங்காங்கே காகங்கள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த காகங்கள் எச்5என்1 வைரஸ் தொற்று ஏற்பட்டு பறவை காய்ச்சலால் இறந்திருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆய்வு முடிவில் எச்5 என்1 வைரஸ் தொற்று, அதாவது பறவை காய்ச்சல் ஏற்பட்டே இந்த காகங்கள் அனைத்தும் இறந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக கால்நடை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பாகூரில் உள்ள மருத்துவமனை வளாகம், அங்குள்ள கோயில் வளாகத்தில் நேற்று 4 காகங்கள் இறந்து கிடந்தன. அதனை கண்ட பொதுமக்கள் ஏன் ஒரே நேரத்தில் காக்கைகள் இறந்துள்ளது? என்று சந்தேகம் அடைந்தனர். நேற்று முன்தினமும் 3 காகங்கள் இறந்து கிடந்ததாக கூறுகின்றனர். கடந்த 3 நாளில் மட்டும் 10 காகங்கள் இறந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தகவல் அறிந்த புதுச்சேரி கால்நடை துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பாகூர் பகுதிக்கு வந்து இறந்து கிடந்த காகங்களை சேகரித்து சென்றுள்ளனர். ஆய்விற்கு அனுப்பி அதன் பிறகுதான் காகங்கள் இறந்தது குறித்தான தகவல் தெரிய வரும். ஏற்கனவே பறவை காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்த செய்திகள் வந்த நிலையில் பாகூரில் காகங்கள் இறந்து கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Puducherry ,Bagur ,Adyar Indira Nagar Park ,Neelankarai ,Chennai ,
× RELATED புதுச்சேரியிலிருந்து...