×

மகனுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி விட்டு கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை

திண்டிவனம், பிப். 21: திண்டிவனம் அருகே மகனுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டைமேடு திருநாவுக்கரசர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி (43). இவரது கணவர் அசோக்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், செல்வி இரண்டு மகன்கள் 1 மகளுடன் தனது அக்கா சாந்தி என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் செல்விக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வி நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தனது மூத்த மகன் பாரத்ராஜ்க்கு (19) செல்போனில் மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டின் பின்புறம் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று விடியற்காலை 5 மணியளவில் அம்மாவை காணவில்லை என்று மகன் பாரத்ராஜ் தேடிய போது செல்போனில் மெசேஜை பார்த்துள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கம் தேடிப் பார்த்தபோது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் செல்வி மிதந்ததை கண்டு பாரத்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த திண்டிவனம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tindivanam ,Selvi ,Thirunavukkarasar Nagar ,Tindivanam, Kottayamedu, Villupuram district ,Ashok Kumar ,
× RELATED புதுச்சேரியிலிருந்து...