ராயக்கோட்டை, பிப்.23: மூகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறையையொட்டி ராயக்கோட்டையில் நேற்று வாகன போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக ஓசூர் மற்றும் பெங்களூருக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். மேலும், ரயில் நிலையம் மற்றும் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லவும், அங்கிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளால் தினந்தோறும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டு வருகிறது. அதுவும், வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அப்பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் போக்குவரத்து பாதிப்பு தொடர்ந்து வருகிறது.
நேற்று எச்சம்பட்டி மேம்பாலம் முதல் தக்காளி மண்டி வரையிலும் சுமார் 3 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொறு புறத்திற்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன ஓட்டிகள் சிரமத்தை போக்கவும், மேம்பால பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்து நெரிசலுக்கு உரிய தீர்வு காண வழிவகை செய்ய வேண்டுமென ராயக்கோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
