நன்றி குங்குமம் டாக்டர்
ஆரோக்கியமாக வாழ்வதே ஓர் அழகுதான், அறிவுதான். எனவே, அவ்வழகைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகும். அதற்காக சில அழகுக் குறிப்புகளை பார்க்கலாம்.
மிதமான சுடுநீரை ஒரு பக்கெட்டில் எடுத்து அதில் 10 மி.லி. டெட்டாலும், 20 மி.லி. ஷாம்பூவும் கலந்து நன்றாக கலக்கவும், பின் அதில் பத்து நிமிடம் பாதங்களை அழுத்தி வையுங்கள். இவ்வாறு செய்வதால், கால் பாதங்களிலுள்ள அழுக்குகளும், கிருமிகளும் நீங்குவதோடு, பாதங்களும் அழகாகும்.
*பன்னீரை உடல் முழுதும் தடவிக் கொண்டால், உடலிலுள்ள வறண்ட நிலை மாறும். நல்ல மணத்தோடு உடலின் சருமம் ஈரப்பதத்துடன் நன்கு விளங்கும்.
*காலணி அணியாமல் தினமும் காலை வேளையில் புற்களின் மேல் நடப்பது பாதங்களுக்கு சிறந்த பயிற்சியாகும். சில நிமிடங்கள் விரல்களை ஊன்றியும் பிறகு சில நிமிடங்கள் குதிகாலை ஊன்றியும் நடப்பது பாதங்களுக்கு நல்லது.
*வாழைப் பழத்தில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால், எண்ணெய்ப் பசையுள்ள தோல் பளபளப்பாக மாறும்.
*மோரை பஞ்சில் தோய்த்து, முகம், கழுத்தில் தேய்த்து வந்தாலும் எண்ணெய்ப் பசையுள்ள தோல் பளபளப்பாகும்.
*முட்டைக்கோஸ் சாற்றோடு ஈஸ்ட், தேன் இவற்றை சம அளவில் கலந்து முகம், கழுத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும், தோல் வறட்சி நீங்கி அழகு கூடும்.
*தேவையான அளவில் பாலேட்டில் எடுத்துக் கொண்டு, இதில் சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாற்றைக் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் பளபளப்பாகும்.
*இளஞ்சூடான பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
*பால், கேரட், ஆரஞ்சு சாற்றோடு சிறிது தேனையும் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவினாலும், முகம் அழகாகும்.
*ஆரஞ்சுப் பழச் சாற்றை முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து முகம் கழுவினால், முகம் பொலிவோடு விளங்கும்.
*பாதாம் பருப்பை பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
*நாட்டு மருந்துக் கடைகளில், ஆலம்விழுது பொடியை வாங்கி வந்து தேவையான அளவில் சுண்ணாம்பையும் சேர்த்து நீரில் ஊற வைத்து அந்த நீரைக் கொண்டு முகத்தைத் தேய்த்துக் கழுவி வந்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.
*குங்குமப்பூவுடன் சிறிது அதிமதுரத்தையும் கலந்து எட்டு மணி நேரம் நீரில் ஊற வைத்த பிறகு எடுத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிவர, முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி சிவப்பழகு ஏற்படும்.
*முகம் சிவப்பழகோடு விளங்க, கடல்பாசி, பன்னீர், சந்தன எண்ணெய் இம்மூன்றையும் சம அளவில் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால், புது அழகோடு முகம் மாறும்.
*உதடுகள் கருப்பாக உள்ளவர்கள் பீட்ரூட்டை வெட்டி அதன் சாற்றை உதடுகளில் தேய்த்து வர, உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.
*சிலருக்கு உதடுகள் வன்மையாக இருக்கும். இவர்கள் மென்மையான உதடுகளைப் பெற வேண்டுமானால் அடிக்கடி வெண்ணெயைப் பூசி வந்தாலே போதும்.
*பால்விட்டு ரோஜாப் பூக்களை அரைத்துப் பூசி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகி அழகாகும்.
*நான்கு தேக்கரண்டி வெள்ளரிச் சாற்றோடு ஒரு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழ சாறும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர, பருக்கள் நீங்குவதோடு உடலுக்கு அழகையும் கூட்டும்.
*சிலருக்கு விரலில் சொத்தை விழுந்திருக்கும். அதற்கு துத்தி இலையைப் பறித்து வந்து அத்துடன் சாம்பிராணியையும் சேர்த்து அரைத்து அந்த விழுதை சொத்தை நகத்தில் பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மாறும்.
*நகம் அழகாக இருக்க நல்லெண்ணெயை விரல், நகம் என்று பூசி, நீவி விட்டாலே போதும். நகம் பளபளவென்று அழகாக மாறிவிடும்.
*கசகசாவை சிறிது நேரம் ஊறவைத்து நன்கு அரைத்து முகத்தில் தடவி முப்பது நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி வர, முகச்சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவோடு திகழும்.
தொகுப்பு: ரிஷி
