நன்றி குங்குமம் டாக்டர்
40 வயதிற்குப் பிறகு, பலரும் தங்கள் பார்வையில் சில மாற்றங்களை உணரலாம். உதாரணமாக, சிறிய எழுத்துக்களைப் படிப்பதில் சிரமம், அருகில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரிவது, கண் சோர்வு மற்றும் நீண்ட நேரம் கணினி அல்லது மொபைல் பார்ப்பதால் தலைவலி போன்றவை ஏற்படலாம். இவற்றில் பெரும்பாலானவை வயதாவதால் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள் என்றாலும், அவற்றில் சில மாற்றங்கள் தீவிரமான கண் நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாகவும் இருக்கலாம். இவற்றைச் சரியான நேரத்தில் கவனித்து, சிகிச்சை பெறாவிட்டால் நிரந்தர பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, 40 வயதிற்குப் பிறகு குறித்த கால இடைவெளிகளில் கண் பரிசோதனைகள் செய்துகொள்வது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்கிறார் முதுநிலை கண் மருத்துவர் மருத்துவர். ஸ்ரீனிவாசன் ஜி. ராவ்நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள், கண்களில் எந்தப் பிரச்னையும் இல்லாவிட்டாலும், குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மூக்குக் கண்ணாடி தேவையா என்று தீர்மானிப்பது மட்டும் இந்த பரிசோதனைகளின் நோக்கமல்ல; கண் அழுத்தம், பார்வை நரம்பு மற்றும் விழித்திரை ஆகியவற்றின் நிலையும், திறனும் பரிசோதிக்கப்படும். கண் அழுத்த நோய் (குளுக்கோமா) மற்றும் விழித்திரைச் சிதைவு போன்ற தீவிரமான நோய்கள் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறியும் இல்லாமல் படிப்படியாகவே வளர்ச்சி அடையும். விரிவான கண் பரிசோதனை மூலம் இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பார்வையை தக்கவைத்துக் கொள்ளலாம்.
சிலருக்கு அடிக்கடி கண் பரிசோதனை தேவைப்படலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குடும்பத்தில் கண் நோய் இருந்த வரலாறு கொண்டவர்கள் அல்லது தங்களது பார்வை திறனில் திடீர் மாற்றத்தை எதிர்கொள்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தியாவில் சுமார் 70 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்படாத கண் பிரச்னைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, சர்க்கரை நோயால் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 45% பேர், பார்வை பாதிக்கப்பட்ட பிறகுதான் தங்களுக்கு நோய் இருப்பதையே கண்டறிகிறார்கள். இந்த ஆபத்தை தவிர்க்க, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உரிய கால இடைவெளிகளில் கண் பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமானது.
தவறாத கால அளவுகளில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் கண்களில் மறைந்திருக்கும் பிரச்னைகளை சீக்கிரமே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று நீண்ட காலப் பலன்களைப் பெறலாம். வெள்ளெழுத்து (Presbyopia), கண்புரை (மற்றும் வயது தொடர்பான விழித்திரைச் சிதைவு போன்ற கண் நோய்கள் பொதுவாக 40 வயதிற்குப் பிறகுதான் தெரியவரும். இது கண்கள் அருகில் உள்ள பொருட்கள் மீது பார்வையை குவிக்கும் திறனை கண்கள் படிப்படியாக இழப்பதே வெள்ளெழுத்து (Presbyopia) எனப்படுகிறது. இதனால் புத்தகம் படிப்பது கடினமாகும். இதை மருத்துவரைப் பார்த்து ‘படிக்கும் கண்ணாடி’ அணிவதன் மூலம் எளிதாகச் சரிசெய்யலாம்.
இந்நோய்கள் மெதுவாகவே தீவிரமடையும். ஆனால் நாளடைவில் படிப்பது, வாகனம் ஓட்டுவது அல்லது உறவினர்களின் முகத்தை அடையாளம் காண்பது போன்ற அன்றாட பணிகள் செய்வதையும் இது சிரமமானதாக மாற்றிவிடும். ஆரம்பத்திலேயே இவற்றை கண்டறிந்தால் உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெற்று, தொடர்ந்து நல்ல பார்வைத்திறனுடன், பிறரை சார்ந்திராமல், தாங்களாகவே வாழ முடியும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கண்களில் வறட்சி என்பது, அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகும். இது பெரும்பாலும் பார்வையை நிரந்தரமாகப் பாதிக்காவிட்டாலும், தொடர்ச்சியான வறட்சி மிகுந்த அசௌகரியத்தைத் தரும் மற்றும் தினசரிப் பணிகளை பாதிக்கும். கண் பரிசோதனை மூலம் இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, ஈரப்பதமூட்டும் சொட்டு மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவுப் பழக்கங்கள் மூலம் கண் வறட்சி பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
நல்ல கண்பார்வைக்குச் சரியான வாழ்க்கை முறை முடிவுகள் எடுப்பது அவசியம். ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதும், கணினியில் மணிக்கணக்கில் வேலை செய்யும்போது கண்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுப்பதும், கீரை வகைகள் மற்றும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதும் அவசியம். வெயிலில் செல்லும்போது புறஊதா கதிர்வீச்சிலிருந்து கண்களைப் பாதுகாக்கக் குளிர் கண்ணாடிகள் அணியலாம். இவற்றுடன் உரிய கால அளவுகளில் கண் பரிசோதனையும் செய்து கொண்டால், பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம்; நீண்ட காலத்திற்கு கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
பலரும் பார்வை மங்கிய பிறகுதான் மருத்துவரிடம் செல்கிறார்கள்; ஆனால் அதற்குள் பாதிப்பு அதிகமாகியிருக்கும். 40 வயதிற்குப் பிந்தைய கண் பரிசோதனையை செலவுமிக்கதாகவோ, அனாவசியமென்றோ நினைக்காமல், உடல்நலப் பராமரிப்பில் அத்தியாவசியமான ஒன்றாகக் கருத வேண்டும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யும் முழு கண் பரிசோதனை, பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சைபெற உதவும். முதிர்ந்த வயதிலும் கூட நல்ல பார்வைத்திறனை தக்கவைத்துக்கொள்ள இவை உதவும்.
தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்
