×

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நன்றி குங்குமம் தோழி

திரிகடுகாய் பால்: சுக்குப்பொடி, மிளகுப்பொடி – தலா ½ தேக்கரண்டி, தண்ணீர் – 100 மில்லி லிட்டர், பால் – 300 மில்லி லிட்டர், தேவைக்கேற்ப பனங்கற்கண்டு, சிட்டிகை மஞ்சள். பாலை காய்ச்சவும். தண்ணீரில் பொடிகள், மஞ்சள் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டி பாலுடன் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் உடல் வலி தீரும்.

பால் நொய் கஞ்சி: பால் – 500 மில்லி லிட்டர், புழுங்கல் அரிசி ெநல் குருணை 100 கிராம், திப்பிலிப் பொடி, மிளகுப் பொடி தலா ½ டீஸ்பூன், சிறிது பனங்கற்கண்டு. வெறும் வாணலியில் குருணை வறுத்து, நான்கு மடங்கு நீர் கலந்து குக்கரில் வேக வைத்து அதில் புளிப்பில்லாத மோர், உப்பு, பெருங்காயத் தூள், பொடி வகைகள் கலந்து பருகலாம். கப நோய்க்கு சிறந்தது.

மருந்து டீ: டீத்தூள், லவங்கப்பட்டை தூள், திப்பிலி தூள், தனியா தூள் – தலா ½ டீஸ்பூன், தண்ணீர் 300 மில்லி லிட்டர், பனங்கற்கண்டு – தேவைக்கு. பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து, பொடி வகைகளை போடவும். நீர் சற்று வற்றிய பிறகு வடிகட்டி, பனங்கற்கண்டு கலந்து பருகலாம். விரும்பினால் சிறிது பாலும் சேர்க்கலாம். சளி, இருமல், தொண்டை வலிக்கு ஏற்றது.

ஸ்பெஷல் ரசம்: சீரகம், துவரம் பருப்பு, மிளகு – தலா 1 டீஸ்பூன், திப்பிலிப் பொடி – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு, உப்பு, பெருங்காயம் – தேவைக்கு. புளியை கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்க்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு துவரம் பருப்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடி செய்து, திப்பிலிப் பொடியையும் கலக்கவும். வாணலியிலேயே புளித்தண்ணீர், பொடியை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் ரசம் ரெடி.

உடல் வலி நீங்கும், சளி, இருமலை போக்கி பசியை தூண்டும். பிரசவித்த பெண்கள் இந்த ரசத்தை சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.

கிராம்பு குடிநீர்: தண்ணீர் – 2 டம்ளர், கிராம்பு – 8, ஏலம் – 1, சீரகம் – ½ டீஸ்பூன். கிராம்பு, ஏலத்தை தூள் செய்து, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து, தண்ணீரை கொதிக்க வைத்து பொடியை போட்டு 10 நிமிடம் மூடிவைத்து வெது வெதுப்பான சூட்டில் அருந்தினால், சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்.

அதிமதுர பானம்: அதிமதுரம் – விரல் அளவு நீளம், தனியா, சீரகம் – தலா ½ டீஸ்பூன், மிளகு, மஞ்சள் தூள் – சிறிது, எலுமிச்சை பழம் – ½ மூடி தோலுடன், தண்ணீர் – 1 டம்ளர், பனங்கற்கண்டு – தேவைக்கு. எல்லாவற்றையும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு, வடிகட்டி, பனங்கற்கணடு சேர்த்து இளம் சூடாக அருந்தவும். வயிற்றுப் புண் வராமலிருக்க வழி வகுக்கும்.

முசு முசுக்கை கம்பு அடை: கம்பு மாவு – 100 கிராம், அரிசி மாவு – 1 டீஸ்பூன், முசுமுசுக்கை இலை – 10, மிளகுத் தூள் – 2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், சிறிய வெங்காயம் – 12, உப்பு – ருசிக்கு, பூண்டு – 10 பல் ெபாடியாக நறுக்கிக் கொள்ளவும், நெய், எண்ணெய் கலந்து – தேவைக்கு. இலையை நன்றாக கழுவி அரைத்து, கம்பு மாவுடன் கலந்து, அரிசி மாவு, மிளகுத் தூள், சீரகம், வெட்டிய வெங்காயம், உப்பு, பூண்டு சேர்த்து தண்ணீர் விட்டு அடை போல வார்த்து சாப்பிடலாம். ரத்தக் கொதிப்புக்கு ஏற்றது.

தொகுப்பு: டி.ஜெயலட்சுமி, தென்காசி.

Tags :
× RELATED அழகே உன்னை ஆராதிக்கிறேன்!