*பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க அறிவுறுத்தல்
ஒசூர் : ஓசூர் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து மண் தொட்டியில் நாற்றுகளை பராமரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமை குடில் அமைத்தும், திறந்த வெளியிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்கின்றனர்.
அதே போல் பீன்ஸ், முட்டைகோஸ், தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் நாற்று வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காய்கறி, மலர்கள் போன்ற நாற்றுகளை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து வளர்த்து அதனை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பிளாஸ்டிக் கவர்களில் நாற்றுகளை வளர்த்து கொடுப்பதால், அதனை வாங்கிச் செல்வோர் விளைநிலங்களில் பிளாஸ்டிக் கவர்களை வீசுவதால் மண் மலட்டுத்தன்மைக்கு மாறி விடுகிறது. அதேபோல், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து மண் தொட்டிகளில் நாற்றுகளை வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் கவர்களில் நாற்றுகளை வளர்த்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவித்து வருகின்றனர்.
இருந்தாலும், பிளாஸ்டிக் கவர்களில் நாற்றுகளை வளர்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் கவர்களோடு சேர்த்து மரங்கன்றுகளை விளை நிலங்களில் நடவு செய்யும்போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, மண் தொட்டியில் நாற்றுகள் வளர்ப்பதை தோட்டக்கலைத் துறையினர் ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயத்திற்கு மாற்றாக நாற்று வளர்க்கும் தொழில் அதிகரித்துள்ளது. பல்வேறு வகையான நாற்றுகளை வளர்த்து அதனை உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். நாற்றுகளை மண் தொட்டியில் வளர்த்தால் கூடுதல் செலவாகும்.
அதனை நாற்றுகள் மீது வைத்து விற்பனை செய்யும்போது, விலை அதிகம் என வாங்குபவர்கள் தயங்குகின்றனர். பிளாஸ்டிக் கவர்களில் வளர்ப்பதன் மூலம் செலவு குறைகிறது. மண் தொட்டியில் நாற்று வளர்க்க வேண்டும் என்றால் தோட்டக்கலைத்துறையினர் மானியம் வழங்க வேண்டும் என்றனர்.
